120 மொழிகளில் பாடி சாதனை!
எத்தனையோ சாதனையாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தன் சாதனையைத் தானே முறித்து புதிய சாதனை படைக்க விரும்பும் பெண் சுசேதா சதிஷ். பதினோராம் வகுப்பு படிக்கும் பதினாறே வயது நிரம்பிய சிறு பெண் சாதனைப் பட்டியலோ மிகப்பெரியது. இதுவரை கின்னஸ் உலக சாதனை உட்பட மூன்று உலக சாதனைகள் படைத்தவர். சென்ற ஆண்டில் உலகின் சிறந்த சிறுமி (குளோபல் சைல்ட் ப்ராடிஜி அவார்டு) என்ற விருது பெற்றிருக்கிறார்.
படிப்பு, இசை இரண்டிலும் தன் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் சுசேதா நடனமும் கற்றவர். தன் இசையால் உலகை நிறைத்துவிடத் துடிக்கும் வேகமும் விவேகமும் நிறைந்த சிறுமி. இறைவன் கருணையும், பெற்றோரின் ஒத்துழைப்பும் முயற்சியும் சுசேதாவின் கடின உழைப்போடு சேரும் பொழுது உலகம் வியக்கும் அற்புதங்கள் தொடர்கின்றன. தேசபக்தியோடு இந்தியாவை நேசிக்கும் துபாயில் வசிக்கும் பெண். தன் மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
என் தாத்தா சேலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார்கள். அப்பாவும் அங்கே படித்தவர்கள் தான். நான் பிறந்தது இந்தியாவில். வளர்ந்தது படிப்பது எல்லாம் துபாயில். ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு இந்தியா வந்துவிடுவோம். இந்தியாவில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் விட இந்தியா வர நான் விரும்புவதற்கு முக்கியக் காரணம் என் வழிகாட்டியாக ஆசானாக நினைக்கும் பின்னணி இசைப் பாடகி பி சுசிலா அம்மாவைப் பார்ப்பதற்குத் தான். சென்னை வந்தவுடன் அவர்களைத் தான் பார்ப்போம்.
இந்தியாவிலும் பாடியிருக்கிறேன். இந்தியாவுக்காகவும் பாடியிருக்கிறேன். இந்த கரோனா நோய்த்தொற்று காலத்தில் எங்கும் பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதில் வருத்தம் தான். என்றாலும், இந்த நேரத்தை புதிய சாதனை படைப்பதற்கான பயிற்சி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி.
மூன்று வயதில் எனக்குப் பாடுவதைக் கேட்டவுடன் திரும்பப் பாடவருகிறது என்று என் பெற்றோர் கர்நாடக இசை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். சில வருடங்களில் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வதற்கும் ஆரம்பித்தேன். ஹிந்துஸ்தானியில் என் குரு சுஜாதா ஹரிஷ்குமார் மற்றும் ஹரிப்ரசாத் ஆவர். தற்பொழுது, ஆஷா மேனன் அவர்களிடம் கர்நாடக இசை கற்றுக் கொண்டும் பயிற்சி பெற்றும் வருகிறேன்.
மூன்று வயதில் முதன்முதலில் மேடையேறிப் பாடினேன். ஒரு மெல்லிசைக் கச்சேரி. அந்த வயதில் பயமோ பாடியதன் முக்கியத்துவமோ எதுவும் பெரிதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வாய்ப்புக் கிடைத்தது பாடினேன் அவ்வளவு தான். ஆனால், மறக்க முடியாத அனுபவம் முதன்முதலில் பி சுசீலா அம்மா பாடிய மேடையில் அவர்களோடு அவர்களுடன் பாடினேன் என்பது. அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். அப்போது எனக்கு ஒன்பது வயது. துபாயில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சிக்கு சுசிலா அம்மா வந்திருந்தார்கள். அன்றைக்குத்தான் அவர்களை நான் பார்த்தேன். அதே மேடையில் பாடுவதற்கு எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய சாதனை முயற்சி ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஆண்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறேன். ஒரே நேரத்தில் நூற்றி இருபது மொழிகளில் தொடர்ந்து பாடியதற்காக இந்த கின்னஸ் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே முப்பது இந்திய மொழிகள், தொண்ணூறு வெளிநாட்டு மொழிகள். இதற்கு ஏழு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஆயிற்று. இந்தியத் துணைதூதரகத்தில் நடைபெற்ற என்னுடைய இந்த முயற்சியை இந்தியப் பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் இருவருக்கும் சமர்பித்தேன்.
பாடுவதற்கு நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டேன். எந்த மொழியானாலும் அதிலே உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும். அதை ஆய்வு செய்வதற்கென்று தனி குழுவை நியமித்திருப்பார்கள். அவர்கள் நாம் அந்த மொழியில் சரியாகப் பாடியிருக்கிறோம் என்று நிபுணர்களைக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே நம்முடைய சாதனையை அங்கீகரிப்பார்கள். அப்படியான அங்கீகாரம் கிடைத்த நேரத்தில் என்னுடைய கடின உழைப்புக்கு வெகுமதி கிடைத்துவிட்டதாக நாம் சாதித்திருக்கிறோம் என்பதாக ஆனந்தம் ஏற்பட்டது.
2018-ஆம் வருடம் நூற்றி இரண்டு மொழிகளில் ஆறு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் பாடினேன். ஒரு நிகழ்ச்சியில் அதிக மொழிகளில் பாடியதற்காக மியாமியில் இயங்கும் அமெரிக்க அமைப்பு உலக சாதனை என்று அங்கீகாரம் தந்தது. அதோடு அதிக நேரம் பாடிய சிறுமி என்றும் மற்றொரு அமைப்பு ஏற்றுக் கொண்டது. இதனால் எனக்கு இரண்டு உலக சாதனை செய்ததற்கான மதிப்பு வழங்கப்பட்டது.
132 மொழிகளில் பாடுவதற்குப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எல்லா மொழிகளையும் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. பாடுவதற்கென்று ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் இசையை நாம் சரியாக உள்வாங்கி கொண்டால் போதும். நம்முடைய நாட்டில் பல மொழிகள் பேசுகிறோம் என்பதால் இதைப் புரிந்து கொள்வது சுலபம். மலையாளம் பேசுவதற்கும் தெலுங்கு பேசுவதற்கும் தமிழ் பேசுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறோமே. ஒவ்வொரு மொழிக்கும் உள்ள ரிதம் அந்த மொழி பேசும் பொழுது பிடிபடும் அது போலத் தான் பாட்டிலும். அதோடு இது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று என் பெற்றோர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது உண்மையும் கூட.
தொடர்ந்து இசை சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அவற்றுள் மூன்று முக்கியமானவை. இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பின் பொழுது தேசிய ஒற்றுமைக்கான சின்னம் என்று பிரதமர் அறிவித்த பொழுது ஒற்றுமைக்கான கீதம் என்று இருபத்தியொன்பது இந்திய மொழிகளில் பாடி அதனை பிரதமருக்கு அனுப்பினேன். சென்ற ஆண்டில் கரோனா விழிப்புணர்வுப் பாடல் இருபத்திரண்டு இந்தியா மொழிகளில் பாடி வெளியிட்டோம். இந்த ஆண்டில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு பாடல் நான்கு மொழிகளில் வெளியிட்டோம். இவையெல்லாம் இந்த கொள்ளை நோய் காலத்தில் எனக்கு மிகுந்த மனநிறைவு தந்த பணிகள்
ஆம். அப்பொழுது எனக்கு எட்டு வயது. கலாம் ஐயா துபாய்க்கு ஒரு புத்தக கண்காட்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இருக்காது? எங்களுக்கும் அந்த ஆவல் இருந்தது. அவர்களைப் பார்ப்பதற்காக இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். என்ன காரணத்தாலோ ஐயா வருவது தாமதமாகி விட்டது. மக்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது.
பார்ப்பதற்காக விண்ணப்பம் செய்து காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு நேரமின்மையால் கிடைக்கவில்லை. எனக்கும் தான். ஐயா புறப்படும்பொழுது என்னுடைய அப்பா கலாம் ஐயா வணக்கம் என்று தமிழில் உரக்கச் சொன்னார்கள். ஐயா புயல் வேகத்தில் திரும்பிப் பார்த்து எங்களை அழைத்தார்கள். அப்பா என் குழந்தையை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொன்னவுடன் ஐயா என்னை அருகில் அழைத்துப் பேசியதோடு என் தலையில் கை வைத்து சில நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி நின்றுவிட்டார்கள். மனதில் இன்னதென்று சொல்ல இயலாத மறக்க முடியாத அனுபவமாக அந்த நிகழ்வு இருந்தது. கலாம் அவர்களின் ஆசி எனக்குக் கிடைத்தது வரம் என்றே கருதுகிறேன்.
இன்னும் நிறைய மொழிகளில் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் சென்று பாட வேண்டும். இசையின் நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கின்னஸ் சாதனையை நானே முறியடித்து உலகின் அத்தனை மொழிகளிலும் பாட வேண்டும்.