கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிரபல நடிகை, தற்போது தனது காதலனுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் காதலிக்கிறார்கள். கடந்த வருடமே இந்த காதல் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டனர்.
நடிகை ஆலியா பட் தற்போது ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘டக்த்’ ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
மேலும் காதலன் ரன்பீர் கபூருடன், முதல் முறையாக ‘பிரம்மாஸ்த்ரா’ என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் ஆலியா பட். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த மாதம் நடிகர் ரன்பீர் கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நடிகை ஆலியா பட்டிற்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இருவரும், தற்போது ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.