சித்தி நடிகையிடம் இருந்து இதை தான் கத்துக்கிட்டேன்: வாரிசு நடிகை
பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கேதர்நாத் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு அவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த சிம்பா படம் சூப்பர் ஹிட்டானது. சிம்பாவை அடுத்து தனக்கு மிகவும் பிடித்த நடிகரான கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து லவ் ஆஜ் கல் படத்தில் நடித்தார் சாரா.
கடந்த ஜனவரி மாதம் வெளியான அந்த படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவர் வருண் தவானுடன் சேர்ந்து நடித்துள்ள கூலி நம்பர் ஒன் படம் வரும் 25ம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. சாரா தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் துவங்கியது. தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அத்ரங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் அக்ஷய் குமாரும், சாராவும் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. நடிக்க வருவதற்கு முன்பு சாரா குண்டாக இருந்தார். அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து நடிகையானதற்கு சயிஃப் அலி கானின் இரண்டாவது மனைவியான கரீனா கபூர் தான் காரணம் என்று கூறப்பட்டது.
சாராவும் சரி, அவரின் தம்பி இப்ராஹிம் அலி கானும் சரி சித்தி கரீனா கபூருடன் நல்ல விதமாக பழகி வருகிறார்கள். கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கான் சாராவின் செல்லமாகும். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் குட்டி தைமூருடன் நேரம் செலவிடுகிறார் சாரா.
இந்நிலையில் சாரா அலி கான் கரீனா கபூர் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் கரீனா கபூர் பற்றி சாரா கூறியதாவது,
கரீனா ரொம்ப ப்ரொஃபஷனலானவர். அவர் வேலை செய்யும் விதம் அருமை. அதனால் அவரை போன்று ப்ரொஃபஷனலாக இருக்க விரும்புகிறேன். இதை தான் நான் நடிக்க வரும் முன்பு அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றார்.