கொரோனாவால் பாதிக்கப்பட்டு நடிகர் யூசுப் உசைன் மரணம்
பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தி திரையுலகில் தூம் 2, ராயீஸ், ரோட் டூ சங்கம், தபாங் 3, ஓ மை காட், ஐ எம் சிங் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் யூசுப் உசைன். 73 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், யூசுப் உசைனின் உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததை அடுத்து, இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலை யூசுப் கானின் மருமகனும், பட இயக்குனருமான ஹன்சல் மேதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததன் மூலம் உறுதிப்படுத்தினார்.
மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்ட உணர்ச்சிகமான பதிவில் கூறியிருப்பதாவது:-
நிதி பிரச்சனையால் ஷாஹிட் படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டேன். கிட்டத்தட்ட என் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன். அப்போது, அவர் (யூசுப்) என்னை அழைத்து ஃபிக்சட் டெப்பாசிட்டில் பணம் வைத்திருக்கிறேன். நீ இவ்வளவு சிரமப்படும்போது அந்த பணம் இருந்து எந்தப் பயனும் இல்லை என்று கூறி காசோலை வழங்கினார். அப்படி தான் ஷாஹிட் படம் வெளியானது.
அவர் எனக்கு மாமனார் இல்லை நல்ல தந்தை. இன்று அவர் மறைந்துவிட்டார். நான் அனாதையாக இருப்பது போன்று உணர்கிறேன். வாழ்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன்" என்றார்.
மேலும், யூசுப் உசைனின் மறைவுக்கு அபிஷேக் பச்சன், நடிகர் மனோஜ் பாஜ்பயி, நடிகையும் இயக்குனருமான பூஜா பட் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். யூசுப் உசைனின் மரணம் பாலிவுட் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.