பெண் குழந்தைக்குத் தந்தையான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தங்களுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை அபிஷன் ஜீவிந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தையின் பிஞ்சுக் கையைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, “அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன் (Officially a girl dad :)” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை அபிஷன் ஜீவிந்த் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய இந்தத் தம்பதியினர், அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், திருமண நாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே பெண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அபிஷன் பகிர்ந்துள்ளதால், ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அபிஷன் ஜீவிந்த். இலங்கையிலிருந்து சென்னைக்கு அகதிகளாக வரும் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், யோகலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, இந்த ஆண்டு வெளியான ‘வித் லவ்’ (With Love) திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். மதன் இயக்கத்தில் அனஸ்வரா ராஜனுடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது சிவராஜ்குமார் மற்றும் யோகலட்சுமி நடிப்பில் கௌதம் சிவராமன் இயக்கி வரும் ‘பிக்காசோ’ திரைப்படத்தில் அபிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், அடுத்த ஆண்டு மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அபிஷன் ஜீவிந்த் தெரிவித்துள்ளார்.