’கடைக்காரர் கிட்ட நான் விக்ரம் மகன் அப்டின்னு சொன்னேன்..’ - துருவ் சொன்ன குட்டி ஸ்டோரி
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்த 'பைசன்' படம் தமிழ் சினிமாவில் பரவலான பாராட்டுகளையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் அக்டோபர் 24 அன்று வெளியாக உள்ள நிலையில், ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அனுபமா, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துருவ், "இது என் ஹைதராபாத்தில் புரமோட் செய்யும் முதல் படம். எனவே இது எனக்கு மிக மிக ஸ்பெஷல்" என்று தொடங்கினார். அவர் தொடர்ந்து சமீபத்தில் ஹைதராபாத்தில் சூட்கேஸ் வாங்க ஓர் மால் சென்றதைப் பற்றி சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்தார்.
"கடைக்காரருடன் பேரம் பேசும்போது வெளியே இருந்து சிலர் எனக்குக் கை காட்டினார்கள். அவர்கள் உங்கள் நண்பர்களா என்று கடைக்காரர் கேட்டார். இல்லை என்றதும், 'நீங்கள் நடிகரா?' என்று கேட்டார். 'ஆம்' என்றேன். உடனே என் தாடியுடன் இருக்கும் முகத்தை உற்றுப் பார்த்து, 'நீங்கள் நடிகர் விக்ரம் போல இருக்கிறீர்கள்' என்றார்.
நான், 'நான் விக்ரம் மகன் தான்' என்று கூறியதும், அவர் உடனே 'நான் விக்ரம் சார் ரசிகர்' என்று பெருமையுடன் கூறினார்." இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த துருவ், தனது அப்பா விக்ரமின் ரசிகர்கள் பற்றி உருகினார். "எந்த பின்னணியும் இல்லாமல் எல்லைகளைக் கடந்து பலரையும் கவர்ந்து என் அப்பாவின் அன்பை சம்பாதித்துள்ளார்.
ஒரு மகனாக இதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்" என்று கூறி, அவர் கண்களில் பனித்தன்மையை ஏற்படுத்தினார்.'பைசன்' படம் தமிழில் வெளியானதும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமூகப் பிரச்சினைகளைத் தொட்டு, தீவிரமான கதைக்கு மென்மையான தொடுதல்களை அளிக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் பாணி இப்படத்தில் மீண்டும் தெரிகிறது. துருவின் நடிப்பும், அனுபமாவின் அழகும், பசுபதி, லால், அமீர் ஆகியோரின் அனுபவமும் படத்தின் வலிமையாக உள்ளன.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை கூடுதல் சிறப்பை அளிக்கிறது.தெலுங்கு ரசிகர்களிடம் இந்தப் படம் எப்படி வரவேற்கப்படும் என்பது அக்டோபர் 24 அன்று தெரிய வரும்.
இதற்கிடையில், துருவின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு சமூக வலைதளங்களில் ஏற்கனவே வைரலாகி வருகிறது. விக்ரம் ரசிகர்களும், துருவின் ரசிகர்களும் இதைப் பற்றி பெருமையுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.