வீட்டில் அமானுஷ்ய சக்தியா? தானாக நகர்ந்த பொம்மை... திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

வீட்டில் அமானுஷ்ய சக்தியா? தானாக நகர்ந்த பொம்மை... திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மும்பை வீட்டில் சந்தித்ததாகக் கூறப்படும் விசித்திரமான அமானுஷ்ய அனுபவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

நேஹா துபியா மற்றும் அங்கத் பேடி இணைந்து நடத்தும் 'டபுள் டேட்' (Double Date) என்ற யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத திகில் அனுபவம் குறித்து ஸ்ருதி ஹாசன் மனம் திறந்துள்ளார்.

தனக்கு சில இடங்களில் நிலவும் விசித்திரமான ஆற்றல்களை உணர முடியும் என்றும், சென்னையில் உள்ள தனது வீட்டில் அத்தகைய உணர்வு ஏற்பட்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மும்பையில் உள்ள தனது வீட்டில் ஏதோ மர்மமான ஒன்று இருப்பதாக அடிக்கடி உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தானாக நகர்ந்த மனித உருவ பொம்மை!

மும்பை வீட்டில் ஆளுயர மனித உருவ பொம்மை ஒன்றை வைத்திருந்ததாகவும், அதற்கு 'ஃபியோனா' (Fiona) என்று பெயரிட்டிருந்ததாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருந்த கூடுதல் ஆடைகளை அலமாரியில் வைக்க இடமில்லாததால் அந்தப் பொம்மைக்கு அணிவித்திருந்ததாகவும், வீட்டிற்கு வரும் நண்பர்கள்கூட அந்தப் பொம்மையைப் பார்த்து வணக்கம் தெரிவிப்பது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மை யாருடைய உதவியும் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைகளில் காணப்பட்டதாகவும், இதனால் தான் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அனுமன் சாலிசாவை ஒலிக்கவிட்டு பொம்மையை அகற்றிய ஸ்ருதி!

இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த அவர், அனுமன் சாலிசாவை ஒலிக்கவிட்டு, கையில் உப்பை வைத்துக்கொண்டு அந்தப் பொம்மையைத் துண்டுகளாகப் பிரித்து அகற்றியுள்ளார்.

மேலும், வீட்டை முழுமையாக மூடி, எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் வகையிலான சடங்குகளையும் செய்ததாகக் கூறியுள்ளார். அதன் பின்னர் தனது வீட்டில் அமைதி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத நம்பிக்கைகள் இல்லாத குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், தனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதாகவும், விக்கா (Wicca) உள்ளிட்ட ஆன்மீக வழிமுறைகள் மீதும் ஆர்வம் இருப்பதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகையின் இந்தத் திகிலூட்டும் அனுபவம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LATEST News

Trending News