Verity : திரை விமர்சனம்
ஆனே ஹாத்வே, டக்கோட்டா ஜான்சன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Verity ஹாலிவுட் திரில்லர் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
பிரபல எழுத்தாளரான வெரிட்டி கிராவ்ஃபோர்ட் விபத்தில் சிக்கியதால், உடல் நிலை செயலிழந்து சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரது பிரபலமான தொடர்கள் முடிந்துவிட்டதாக வாசகர்கள் நினைத்துவிடக் கூடாது என, வெரிட்டிக்கு விபத்து நேர்ந்தது ஊடகங்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது.
இந்த சூழலில், நியூயார்க்கில் வசிக்கும் பிரபலமில்லாத எழுத்தாளரான லோவென் ஆஷ்லிக்கு, ஒரு நிறுவனத்தில் இருந்து நாவல் தொடர் ஒன்றை நிறைவு செய்ய வாய்ப்பு வருகிறது.
அதனை ஏற்க முதலில் மறுக்கும் லோவென் பின்னர் வெரிட்டியின் கணவர் ஜெர்மியின் வேண்டுகோலினை ஏற்று பனிபடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு வெரிட்டியின் நிலையைக் கண்டு பரிதாபப்படும் லோவென் அந்த வீட்டின் விசித்திர அமைப்பைக் கண்டு சற்று அச்சம் கொள்கிறார்.
எனினும், வெரிட்டியின் ரைட்டிங் தன்மையை புரிந்துகொள்ள அவரது புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கிறார். அப்போது கிடைக்கும் ஒரு பென்ட்ரைவில் உள்ள கதையை படிக்க லோவென் அதிர்ச்சியடைகிறார்.
அதன் பின்னர் அந்த வீட்டில் என்னவெல்லாம் விசித்திர சம்பவங்கள் நடந்தது, லோவெனின் நிலை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
நிக் அன்டோஸ்காவின் திரைக்கதையில் மைக்கேல் ஷோவால்டர் சைக்கோலாஜிக்கல் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் ஆரம்பத்திலேயே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை காட்டி திடுக்கிட வைக்கும் இயக்குநர், ஆனேவின் வீட்டிற்கு டக்கோட்டா ஜான்சன் சென்ற பின் நடக்கும் விஷயங்களை திகிலாக காட்சிபடுத்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு ட்விஸ்ட் ஆக வெளிப்பட நம்மை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துகிறது. அந்த அளவிற்கு கோலீன் ஹூவேரின் கதையை நேர்த்தியாக படமாக்கியுள்ளார் இயக்குநர் மைக்கேல்.
வெரிட்டி கதாபாத்திரத்தில் ஆனே ஹாத்வே அட்டகாசம் செய்துள்ளார். திடீர் திடீரென வந்து பயமுறுத்துவது, விரக்தியில் தடுமாறுவது, ரொமான்ஸ் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அவருக்கு சற்றும் குறையாத வண்ணம் டக்கோட்டா ஜான்ஸன் படம் முழுக்க நடிப்பில் தெறிக்கவிட்டுள்ளார். ஹீரோவுடன் சேர்ந்து அவர் செய்யும் ஒரு விஷயம் அய்யயோ என்று கூற வைக்கும்.
அவர் பயப்படும் காட்சிகள் நமக்கும் பயம் ஏற்படும்; அந்தளவிற்கு எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் ஜோஷ் ஹார்ட்னெட் குடும்பத்தலைவனாகவும், ரொமாண்டிக் நபராகவும் கலக்குகிறார்.
அதே சமயம் ஒரு கட்டத்தில் அவர் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அதிர வைக்கிறார். அவரது மகனாக நடித்திருக்கும் பிராடி வாக்னர் கியூட் பாயாக இருந்தாலும் ஒரு காட்சியில் பயமுறுத்திவிடுகிறார்.
படத்தில் ஏகப்பட்ட அடல்ட் ஒன்லி காட்சிகள் உள்ளதால், கண்டிப்பாக இது 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கான படம்.
ஜிம் ஃப்ரோனாவின் ஒளிப்பதிவு, ஜே கெஸிடியின் படத்தொகுப்பு, வோல்கர் பெர்டெல்மனின் இசை என அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
க்ளாப்ஸ்
- நடிகர்கள்
- திரைக்கதை
- ட்விஸ்ட்
- கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த வெரிட்டி திரில்லர் ரசிகர்களுக்கு செம ட்ரீட். திரையரங்கில் ரசிக்கலாம்.