“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்புடன், தனது நடனத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்றுள்ள இவர், தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக உள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான தமன்னா, அதனைத் தொடர்ந்து ‘ஸ்த்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ பாடலிலும் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், தனது திரைப்பயணம் மற்றும் கதாபாத்திரத் தேர்வு குறித்து தமன்னா பேசியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “நடனப் பாடல்களை வெறும் பாடல்களாக நான் பார்ப்பதில்லை. அவற்றையும் ஒரு கதாபாத்திரமாகக் கருதி முழு அர்ப்பணிப்புடன் செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சவாலான மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க தான் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகவும், ஆனால் பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை நடனப் பாடல்களுக்காக மட்டுமே அணுகுவது வருத்தமளிப்பதாகவும் தமன்னா கூறியுள்ளார்.
“கவர்ச்சியான நடிகை என்ற பிம்பத்தைத் தாண்டி, எனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கப்பட வேண்டும்” என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமா காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவதாகக் குறிப்பிட்ட தமன்னா, கதையின் தேவைக்கேற்ப இடம்பெறும் முத்தக் காட்சிகளை மட்டும் தனியாகப் பிரித்து தவறாக மதிப்பிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளன.