Toxic Advance Booking Collections: அமெரிக்காவில் மாஸ் காட்டும் யாஷ்.. ரிலீஸுக்கு முன்பே கோடிக் கணக்கில் வசூல்
சென்னை: கன்னட திரையுலகின் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படம் மீது இந்திய அளவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 'கேஜிஎஃப்' படங்களுக்குப் பிறகு யஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால், இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், தற்போது ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகிறது. படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் தொடங்கியுள்ள முன்பதிவு எதிர்பார்த்ததைவிட வேகமாக சென்று கொண்டிருக்கிறது. டாக்ஸிக் படத்தின் பிரம்மாண்ட கூட்டணி:
'டாக்ஸிக்' படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வெங்கட் கே. நாராயணா மற்றும் யஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் அக்ஷய் ஓபராய், டேரல் டிசில்வா, சுதேவ் நாயர், சஞ்சீதா ஷேக், கைல் பால், அமித் திவாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஷால் மிஸ்ரா, ரவி பஸ்ரூர், தனிஷ்க் பாக்சி, ஃபஹீம் அப்துல்லா உள்ளிட்டோர் இசையில் பங்களித்துள்ளனர். ரவி பஸ்ரூர் பின்னணி இசையை கவனித்துள்ளார்.
பலமுறை தள்ளிப்போன ரிலீஸ்: 'டாக்ஸிக்' படத்தின் வெளியீடு ஏற்கனவே பலமுறை தள்ளிப்போயுள்ளது. முதலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக அந்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு இந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் நிலவிய சூழல் மற்றும் அடுத்தடுத்த பெரிய படங்களின் வெளியீடு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் தேதி மாற்றப்பட்டது. பின்னர் ஜூன் 4ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், விநியோக பிரச்சினைகள் காரணமாக தற்போது ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு படம் மாற்றப்பட்டுள்ளது.
ரூ.500 கோடிக்கு மேல் பட்ஜெட்?: யாஷ் படங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய மார்க்கெட்டை கருத்தில் கொண்டு 'டாக்ஸிக்' படத்தின் பிசினஸும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் திரையரங்கு மற்றும் திரையரங்கிற்கு அப்பாற்பட்ட உரிமைகள் மூலம் சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு மாநிலங்களில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வட இந்தியாவில் ஏஏ ஃபிலிம்ஸ், வெளிநாடுகளில் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் படத்தை வெளியிடுகின்றன. தமிழகத்திலும் முன்னணி நிறுவனங்கள் இணைந்து வெளியீட்டு பணிகளை மேற்கொள்கின்றன.
அமெரிக்காவில் முன்பதிவிலேயே மாஸ்: இதற்கிடையே, வட அமெரிக்காவில் 'டாக்ஸிக்' படத்திற்கான முன்பதிவு தொடங்கியதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க முன்பதிவில் ஏற்கனவே 1 லட்சம் அமெரிக்க டாலர் என்ற மைல்கல்லை 'டாக்ஸிக்' கடந்துள்ளது. கிடைத்துள்ள தகவல்களின்படி, 592 காட்சிகளுக்கான முன்பதிவு மூலம் சுமார் 1,04,200 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி, வசூலாகியுள்ளது.
படம் வெளியாகும் நாளில் காட்சிகள் மற்றும் முன்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 'டாக்ஸிக்' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸில் தனது தாக்கத்தை காட்டத் தொடங்கிவிட்டதாக யஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.