எக்ஸாம் வெப் சீரிஸ் பார்த்தாச்சா?.. பாஸ் மார்க்கா? இல்லை ஃபெயிலா?.. இதோ விமர்சனம்
சென்னை: சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ். எக்ஸாம் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நீண்ட காலத்துக்கு பிறகு சற்குணம் இயக்கியிருப்பதால் இதன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அது எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
சற்குமணம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர். களவாணி, வாகை சூட வா ஆகிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாக எதுவும் சரியாக அமையவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் எக்ஸாம் என்ற வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். இதில் துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது சீரிஸ்?: சற்குணத்தை பொறுத்தவரை அவரது கதைக்களம் ரொம்பவே எதார்த்தமாகத்தான் பெரும்பாலும் அமையும். அதன் காரணமாகத்தான் அவரது படைப்புக்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அது அவரது கடந்த சில படைப்புகளில் மிஸ் ஆனது. ஆனால் இந்த வெப் சீரிஸில் அதை மீண்டும் கையில் எடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக இதுவரை பெரும்பாலும் தொடாத கதை களத்தை அவர் தொட்டிருப்பதே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
என்ன கதைக்களம்?: க்ரூப் 1, க்ரூப் 2 ஆகிய அரசு தேர்வுகளில் நடக்கும் மோசடியை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகவும், விட்டுக்கொடுக்காமலும் பேசியிருக்கிறார். குறுக்கு வழியில் தேர்வில் வென்று உயர்ந்த அரசு பணியில் ஒருவர் சேர்வதால்; நேர்மையாக அதை அணுகியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறார்; இன்னொருவர் அதே குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து அதிகாரத்துக்குள் செல்கிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் அவுட் லைன்.
கலக்கும் துஷாரா: வெப் சீரிஸின் பெரிய ப்ளஸ்களில் ஒன்று துஷாரா விஜயன். காவல் துறை அதிகாரியாக மிடுக்கோடு வரும் அவர்; தான் மரமல்லி இல்லை என்பதை அடுத்தவர்கள் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற இடத்தில் எல்லாம் தனது பதற்றமான பாடி லாங்குவேஜால் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் நேர்மையாக தேர்வை எழுதியும் அதனால் ஏற்படும் சங்கடத்தின்போது; தன்னுடைய நடிப்பில் மெர்சல் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் அவரது அம்மா இறக்கும் காட்சியும், சிறையில் அந்த தாய் அலைக்கழிக்கப்படுவதை பார்க்கும்போது உண்மையில் இயக்குநர் மனதை கனக்க வைத்துவிட்டார். இன்னும் பல ஆண்டுகளுக்கு துஷாரா பெரிய ரவுண்டு வருவார் என்பதை இந்த வெப் சீரிஸ் கட்டியம் கூறியிருக்கிறது. அதிதி பாலனுக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும் துஷாராவோடு சேர்ந்து செய்யும் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்புகின்றன.
ஒரு படைப்புக்கு வில்லன் கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமானது. இதில் அதை ஓரளவுக்குத்தான் ஈடு செய்திருக்கிறார். வில்லன் கெத்தை காண்பிக்கக்கூடிய பல இடங்கள் இருந்தாலும்; அதில் நடித்திருப்பவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்துவிட்டார் என்றே தெரிகிறது. வில்லனுக்கான பிளாஷ்பேக் காட்சிகள் பார்த்து பார்த்து பழகிய கிளிஷேதான். அதேபோல் டிஎஸ்பி ஆள் மாறாட்டம் விஷயமும் கொஞ்சம் அபத்தமாகவே தெரிகிறது. அவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் மரமல்லியை; ஏதோ பல்லியை கடத்துவது போல் கடத்துவதும்; அவருக்கு பதிலாக துஷாரா என்று அந்த சீட்டில் அமர்வதும் நெளியத்தான் வைத்திருக்கின்றன. இயக்குநர் அதை கொஞ்சம் இன்னும் பட்டை தீட்டிருக்கலாமோ என தோன்றுகிறது.
அதேபோல் துஷாரா விஜயனை வழிநடத்தும் அப்பாஸ் கேரக்டரை இன்னும் கொஞ்சம் வீரியமாக எழுதியிருக்கலாம். இருந்தாலும் அவர் தன் பங்குக்கு சூப்பர் நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். சாம். சிஎஸ்ஸின் இசை அவ்வப்போது திகிலூட்டுகின்றன. மலை பிரதேசத்தின் அழகை ஒளிப்பதிவாளர் ஜில் என்று நம் கண்களுக்குள் கடத்துகிறார். சாமானியர்கள் நம்பிக்கொண்டிருக்கும் அரசு தேர்வில் நடக்கும் முறைகேட்டை பேசிய இயக்குநர்; அதனை இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசியிருந்தால் கண்டிப்பாக இன்னும் பெரிய ஹிட்டடிக்கும். இப்போதும் ஒன்றும் மோசமில்லை. தாராளமாக வீக் என்ட்டில் குடும்பத்தோடு ஒருமுறை பார்ப்பதற்குரிய அத்தனை அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.