பிஞ்சு குழந்தையை இழந்த தாய்.. 5 நிமிடங்கள் காலை தொட்டு கலங்கிய விஜய்.. அறையில் நடந்தது என்ன?
தவெக தலைவர் விஜய் கரூர் சுற்றுப்பயணம் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்பது மேற்கொண்டு துயரமான ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய். அவர் அப்படி செய்தது ஆதரவையும், எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் ஆரம்பித்தார். அந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக கரூருக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க விஜய்யின் தாமத வருகை, அக்கட்சியினரின் அலட்சியமான ஏற்பாடுதான் காரணம் என்பது தமிழ்நாட்டில் அனைவரின் கருத்து. கிட்டத்தட்ட கட்சியினரே அதை மனதுக்குள் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
இந்த துயர சம்பவம் நடந்த பிறகு ட்வீட்டையும், வீடியோவையும் வெளியிட்ட விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அவர் உச்சக்கட்ட சோகத்தில் இருப்பதால்தான் செல்லவில்லை என்று தவெகவினர் தொடர்ந்து கூறினார்கள். இப்படிப்பட்ட சூழலில் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு செயலை தொடங்கிவைத்தார் அவர்.
அதாவது துக்கம் விசாரிக்க அனைவருமே நேரில்தான் செல்வார்கள். ஆனால் இவரோ பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்தார். 41 குடும்பங்களுக்கும் தனி அறையை ஒதுக்கி அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது இந்த நடவடிக்கை கடும் கண்டனத்தை சம்பாதித்தது. ஆனால் அவர் கரூருக்கு நேரில் சென்றால் மேற்கொண்டு பிரச்னை வந்தாலும் வரும் என்பதால்தான் கட்சியினர் இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி தனி பேருந்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மகாபலிபுரத்துக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்; கண் கலங்கியதாகவும்; உங்கள் வீட்டில் ஒருவனாக இனி சாகும்வரை இருப்பேன். உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்வேன் என சொல்லி; மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிஞ்சு குழந்தையை இழந்த தாயும், தந்தையும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். விஜய்யை சந்தித்த தந்தை தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், "விஜய்யை பார்த்தவுடன் எனது மனைவி அழுதார். விஜய்யும் அழுக ஆரம்பித்துவிட்டார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை எனது மனைவியின் காலை பிடித்து கலங்கியபடி உட்கார்ந்துவிட்டார். 'உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. நேரில்தான் வந்திருக்க வேண்டும். இங்கே அழைத்து வந்துவிட்டேன். அதற்காக மன்னித்துவிடுங்கள். உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது' என சொன்னார். எனது குழந்தையின் புகைப்படத்தை வாங்கி எதுவுமே பேசாமல் ஐந்து நிமிடம் பார்த்துக்கொண்டே இருந்தார். நொடிக்கு நொடி அழுதுகொண்டே இருந்தார். அவர் ரொம்பவே வெக்ஸாகி இருக்கிறார். எனக்கும், மனைவிக்கும் இன்சூரன்ஸ் போட்டுக்கொடுத்திருக்கிறார். அடுத்து மகன் பிறந்தாலும் அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்" என்றார்.