`சலாம் சலார் பாய்' சொல்லலாமா? பிரபாஸுக்கு வெற்றியைத் தருகிறாரா கே.ஜி.எஃப் இயக்குநர்?
இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்த முறை கான்சார் என்னும் தனி நாட்டையே உருவாக்கி அதில் தன் கதாபாத்திரங்களை இரக்கமற்றவர்களாக உலவவிட்டிருக்கிறார். ஆனால் படமாக 'சலார்' எப்படியிருக்கிறது?
சுதந்திர இந்தியாவிற்கு அருகில், நவீன ஆயுதங்கள், ராணுவம், தனி சட்டத் திட்டங்களுடன் 'கான்சார்' என்ற நாடு ராஜமன்னார் (ஜகபதி பாபு) என்ற அரசனின் தலைமையில் ஆளப்பட்டு வருகிறது. ராஜமன்னாரின் மகனான வரதராஜா ராஜமன்னாரும் (ப்ரித்விராஜ்) தேவாவும் (பிரபாஸ்) உயிர் நண்பர்கள். சிறுவயதாக இருக்கும்போது, தேவாவின் அம்மாவுடைய (ஈஸ்வரி ராவை) உயிரை, தன் தந்தையின் கட்டளையையும் மீறிக் காப்பாற்றுகிறான் வரதராஜா. "நாம போயிடுவோம். இனி இந்த நாட்டிற்கு நாம வரக் கூடாது" என சத்தியம் செய்யக் கேட்கும் அம்மாவையும் மீறி, "நீ கூப்பிட்டா நான் வருவேன்" என தன் நண்பன் வரதாவிற்கு சத்தியம் செய்துவிட்டு கான்சாரை விட்டு வெளியேறுகிறான் 10 வயது தேவா.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, வரதாவுக்கு ஒரு பிரச்னை வர, மீண்டும் கான்சாருக்குள் நுழைகிறார் தேவா. அப்படி வரதாவுக்கு என்ன பிரச்னை, அதை தேவா எப்படி எதிர்கொள்கிறான், தேவாவிற்கும் கான்சாருக்கும் உள்ள உறவு என்ன, தேவாவின் வருகை கான்சாரை எப்படித் திருப்பிப் போடுகிறது போன்ற கேள்விகளுக்கு தன் ஸ்டைலில் ஒரு ஆக்ஷன் திரைக்கதையை அமைத்து ரத்தம் தெறிக்கத் தெறிக்க கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.
ஆக்ஷன் காட்சிகளுக்கேற்ற உடல்வாகு, உடல்மொழி, கோபம் என 'ஒன்மேன் ஆர்மி'யாக கச்சிதமாகப் பொருந்திப்போகிறார் பிரபாஸ். உணர்வுபூர்வமான காட்சிகளிலும் அதே ஆக்ஷன் முகத்தை வைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். அவருக்கு பன்ச் வசனங்கள் குறைவு என்பதும் ஆறுதல். இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் பிரித்விராஜ், கதாபாத்திரத்தின் எல்லைகளை உள்வாங்கி, தேவையான நடிப்பை மட்டும் வழங்கி கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் பிரபாஸோடு போட்டிப் போட்டிருக்கிறார். நாயகியின் பாத்திரம் கதைக்கு வெளியே இருந்தாலும், அவரை வைத்தே கதையை நமக்குச் சொல்ல வைத்த விதம் புத்திசாலித்தனம். அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
மைம் கோபி, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ் எனத் துணை கதாபாத்திரங்களின் அணிவகுப்பில் ஈஸ்வரி ராவின் பாத்திரப் படைப்பு ஒரு கட்டத்துக்குப் பிறகு அயர்ச்சியை மட்டுமே உண்டாக்குகிறது. கதையை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் பிடித்து வைத்திருக்கும் பாத்திரமாக அவர் எழுதப்பட்டிருப்பது சறுக்கல். ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜு, ஜான் விஜய், ரமணா என ஒரு லாரி வில்லன்கள் இருந்தாலும் யாருமே நாயகனுக்கு நிகராக நின்று மிரட்டவில்லை என்பது சறுக்கல்.
அதுவரை இருந்த மாஸ் மசாலா படங்களுக்கான இலக்கணத்தை உடைத்து, அந்த வகை படங்களுக்கான கதை சொல்லும் வெளியைப் பன்மடங்கு பெரிதாக்கின 'கே.ஜி.எஃப்' படங்கள். நாயக பிம்பம் பிடிக்காதவர்கள்கூட ராக்கி பாயை ரசித்தனர். அதன் பின்னிருந்த இயக்குநர் பிரஷாந்த் நீல், இந்த முறை கான்சார் என்னும் தனி நாட்டையே உருவாக்கி அதில் தன் கதாபாத்திரங்களை இரக்கமற்றவர்களாக உலவவிட்டிருக்கிறார். ஆக்ஷன் படம்தானே எனத் தொழில்நுட்பம், பிரமாண்ட ஸ்டன்ட் போன்றவற்றை மட்டும் நம்பாமல் உணர்வுபூர்வமாகவும், அடர்த்தியான அடுக்குகள் கொண்ட கதையாலும் கவனிக்க வைக்கிறார்.
பிரஷாந்த் நீலின் பிரத்யேக திரையாக்கத்திற்கும் திரைமொழிக்கும் தொழில்நுட்ப குழு பக்கபலமாக இருந்திருக்கிறது. புவன் கவுடாவின் ஒளிப்பதிவு பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்ல, உணர்வுபூர்வமான க்ளோசப் ஷாட்கள், பிரமாண்டத்தைக் கடத்தும் டிரோன் ஷாட்கள் என எல்லா இடங்களிலும் பிரமாதமாக வேலை செய்திருக்கிறது. பெரும்பாலும் 'கறுப்பு - வெள்ளை - ரத்தச் சிவப்பு' மட்டுமே நிரம்பியிருக்கும் உலகத்துக்குக் கச்சிதமாக உருவம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். உஜ்வால் குல்கர்னியின் படத்தொகுப்பு தேவையான விறுவிறுப்பையும் கச்சிதத்தையும் வழங்கியிருக்கிறது என்றாலும், முதற்பாதியை இன்னும் செறிவாகத் தொகுத்திருக்கலாம். ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையில் 'ப்ளாக் ஸ்கிரீனை' கொண்டு வந்து விறுவிறுப்பைக் கடத்த முயன்றது, 'கே.ஜி.எஃப்' பேட்டர்னை நினைவுபடுத்துகிறது. ரவி பஸ்ருரின் இசையில் பாடல்கள் திரைக்கதையோடு வந்து போகின்றன. ஒரு உச்சபட்ச ஆக்ஷன் படத்திற்கான பின்னணி இசையை வழங்கிய விதத்தில் 'க்ளாப்ஸ்' வாங்குகிறார். சென்டிமென்ட் காட்சிகளிலும் குறை சொல்ல முடியாத உழைப்பு!
நிலக்கரி சுரங்கம், அங்குள்ள சிறு கிராமங்கள், வீடுகள், கான்சார் என்கிற கற்பனை நகரம், அங்குள்ள பிரமாண்ட வீடுகள், நவீன ஆயுதங்கள், பல்வேறு பழங்குடிகளின் வழிபாட்டு முறைகள் எனப் பெரும் உழைப்பை ஒவ்வொரு ப்ரேமிலும் கொட்டி தயாரிப்பு வடிவமைப்பைச் செய்திருக்கிறார் சிவக்குமார். தோட்டா விஜய் பாஸ்கரின் ஆடை வடிவமைப்பும் சபாஷ் போட வைக்கிறது. ஆங்காங்கே வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் பெரிய குறைகள் ஏதுமில்லை.
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் அந்தச் சண்டைக் காட்சி, கடத்தல் சரக்கிலிருக்கும் 'சீல்' (இலச்சினை) குறித்த பில்டப்களை வைத்தே நாயகன் பாத்திரத்தின் மாஸ் மீட்டரை ஏற்றிவிடும் விதமாக வரும் அந்த இன்டர்வெல் பிளாக், கான்சாஸில் நாயகன் நிகழ்த்தும் அந்த வதம், அதற்கான சண்டைக்காட்சி வடிவமைக்கப்பட்ட விதம், க்ளைமாக்ஸ் யுத்தம் என நிறைய காட்சிகள் அப்ளாஸ் பெறுகின்றன. 'சீஸ்ஃபயர்' என்ற அரசக் கட்டளைக்கு எதிராக நடத்தப்படும் வாக்கெடுப்பு, அதற்கான அரசியல் காய் நகர்த்தல் என எழுத்திலும் ஆங்காங்கே சுவாரஸ்யங்கள் எட்டிப் பார்க்கின்றன.
ஆனால், படத்தின் மிகப்பெரிய பிரச்னையே இதன் மொத்தத் திரைக்கதை அமைப்பையும் `மாணிக்கம் டு பாட்ஷா' டெம்ப்ளேட் என்பதாகச் சொல்லிவிடலாம். `மாணிக்கமாக அடக்கிவாசிக்கும் ஹீரோ, திமிறிக்கொண்டு எழுந்து பத்து பேரை அடிப்பது' என்ற இந்த பேட்டர்ன்தான் படம் நெடுக வந்துபோகிறது. ஒரு சில இடங்களில் `மாணிக்கம்' பில்டப்கள் கொஞ்சம் தூக்கலாகவே போக, `எப்ப சார் சண்டை செய்வீங்க?' என்று வாய்விட்டுக் கேட்க வைக்கிறார்கள்.
'கே.ஜி.எஃப்' படங்கள் வெற்றி பெற்றதற்கான மற்றுமொரு காரணம், அங்கே நாயகன் என்னும் தனி ஒருவன், அரசாங்கத்துக்கு எதிராகவும் சிஸ்டத்துக்கு எதிராகவும் தன் வாதங்களை முன்வைப்பான். அடிமைத்தனத்துக்கு எதிராக இருப்பான்; அதன் அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்துவான். அதற்காக அவனின் வழிமுறையாக மட்டுமே வன்முறை இருக்கும். ஆனால், 'சலார்' படத்திலிருக்கும் பிரச்னையே அது எங்குமே அதிகாரத்தைக் கேள்வி கேட்கவில்லை. சொல்லப்போனால் அதில் காட்டப்படும் நாடுகூட இன்னமும் மன்னராட்சியில்தான் கட்டுண்டு கிடக்கிறது.
இதனாலேயே ஒரு சாதாரணன், பெரும் அதிகாரத்தை எதிர்க்கிறான் என்னும்போது தேவையான எமோஷன்கள் எட்டிப் பார்க்க மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றன. நாயகனின் வெற்றி என்பது அவனின் உடல்பலத்தை வைத்து மட்டுமே கட்டமைக்கப்படுகிறதே தவிர, எழுத்தாகச் சுவாரஸ்யமற்று தவிக்கிறது படம்.
போதாக்குறைக்கு, தோன்றும் கேள்விகளுக்கும், லாஜிக் பிரச்னைகளுக்கும் இரண்டாவது பார்ட்டில்தான் பதில்கள் கிடைக்கும் என்பதும் ஏமாற்றமே. இதனாலேயே ஒரு முழுமையற்ற தன்மை இந்த முதல் பாகத்துக்கு வந்துவிடுகிறது. படத்தில் நடந்த கொலைகள் எத்தனை, எத்தனை லிட்டர் ரத்தத்தை வீணடித்தார்கள் என்று குவிஸ் போட்டியே நடத்தும் அளவுக்கு அதீத வன்முறையைக் கையாண்டுள்ளனர்.
ஒரு ஆக்ஷன் படமாக, மாஸ் மசாலாவாக ஃபர்ஸ்ட் கிளாஸ் பெறவில்லை என்றாலும் மேக்கிங்காலும், ஸ்டன்ட் காட்சிகளாலும் தேர்ச்சி பெறுகிறான் இந்த `சலார்'.