நடிகை ரம்பாவின் கணவர் ஏற்பாட்டில் யாழில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: அனுமதி இலவசம்.
கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழரான நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன் பத்மநாதன் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்ட இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தாயக பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றது.
முதலீடுகள் மாத்திரமின்றி, சமூக, கலை, கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், இலங்கை SLIIT நிறுவனத்துடன் கைகோர்த்து Northern Uni வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறான செயற்திட்டத்தால் பல்வேறு துறைகளிலும் செயல்திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே northern Uni உரிமையாளரான புலம் பெயர் தமிழர் இந்திரன் பத்மநாதனின் குறிக்கோளாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்திரன் பத்மநாதன் Northern Uni யினூடாக எதிர்வரும் 21ஆம் திகதி (21.12.2023) மிகப்பிரமாண்ட இசை நிகழ்ச்சியொன்றை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்பா உட்பட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
டிடி என்ற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க, நடிகர் யோகிபாபு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சின்னத்திரை பிரபலங்கள் ஆல்யா- சஞ்சீவ், மைனா நந்தினி மற்றும் பிரபல பாடகர்கள், பாடகிகளும் பங்கேற்கின்றனர்.
லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழின் ஊடக அனுசரணையில் யாழ் முற்றவெளியில் இலவசமாக நடாத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.