ஆகஸ்ட் 16 1947 திரைவிமர்சனம்
கவுதம் கார்த்திக் நடிப்பில் அறிமுக இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16 1947. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
சுதந்திரம் கிடைத்த பின்பும் தங்களது கிராமத்தின் சுதந்திரத்திற்காக மக்கள் போராடுகிறார்கள் என்ற சுவாரஸ்யமான ஒன் லைன் அந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தியது. அத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்ததா வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
திருநெல்வேலி அருகே உள்ள செங்காடு எனும் கிராமம் ராபர்ட் கிளைவ் எனும் வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டு கிடைக்கிறது. ராபர்ட் கிளைவ்வின் மகன் ஜஸ்டின், தான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்கிறார்.
அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் 16 மணிநேரம் வேலை செய்து வருகிறார்கள். சிறுநீர் கழிக்கக்கூட வெள்ளைக்காரன் உத்தரவு அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இப்படி சொல்ல முடியாத அளவிற்கு செங்காடு மக்கள் வெள்ளைக்காரனிடம் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என அறிவிப்பு வெளியாகிறது.
ஆனால், செங்காட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ் இந்த விஷயத்தை செங்காடு மக்களிடம் இருந்து மறைக்கிறார். இதன்பின் என்ன நடந்தது..? சுதந்திரம் கிடைத்த செய்தி செங்காடு மக்களுக்கு தெரியவந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் கவுதம் கார்த்திக் எதார்த்தமான நடிப்பில் பட்டையை கிளம்பிவிட்டார். கடந்த வாரம் பத்து தல இந்த வாரம் ஆகஸ்ட் 16 1947 என தொடர்ந்து மக்களை தன்னுடைய படங்கள் மூலம் கவர்ந்து வருகிறார்.
புகழ் இந்த படத்தில் கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக வரும் ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்துள்ளார். மேலும் வில்லன் ராபர்ட் கிளைவ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருந்த பொன்குமார் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். அறிமுக படத்திலேயே நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை படமாக்கியுள்ளார். அதற்க்கு முதல் பாராட்டுக்கள்.
திரைக்கதையில் சில இடங்கள் தொய்வு இருந்தாலும், மற்ற விஷயங்கள் அதை கடந்து செல்ல வைத்துவிட்டது. ரன் டைம் சற்று குறைத்து இருக்கலாம். பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் பெரிதும் ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவு, எடிட்டிங் பக்கா. முக்கியமாக கலை இயக்குனருக்கும், ஆடை வடிவமைப்பாளராகளுக்கு பாராட்டுக்கள். படத்தில் சிறப்பாக அமைத்திருந்த விஷயங்களில் இவை இரண்டுமே முக்கிய விஷயங்கள்.
பிளஸ் பாயிண்ட்
கவுதம் கார்த்திக் நடிப்பு
பொன்குமார் எடுத்துக்கொண்ட கதைகளம்
கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பு
மைனஸ் பாயிண்ட்
சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
ரன் டைம் சற்று குறைத்து இருக்கலாம்