பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்

கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்திய அளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

70 ஆண்டு தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வனை திரையில் காண இன்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். அதில் எதிர்பார்ப்பிற்கும் கொஞ்சம் கூட பஞ்சமில்லை. ஒரு பக்கம் மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மறுபக்கம் 70 ஆண்டு கனவு என பொன்னியின் செல்வன் மீது இணையற்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட இமாலய எதிர்பார்ப்பினை சோழர்கள் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? வாருங்கள் விமர்சனத்தில் காண்போம்.. 

கதைக்களம் 

சோழ மண்ணை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஆதித்த கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை, இளைய மகன் அருண்மொழி வர்மன். இதில் ஆதித்த கரிகாலன் தனது நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவனுடன் இணைந்து இராஷ்டிரகூடர்களுக்கு எதிராக போர் புரிந்து அதில் வெற்றியும் பெறுகிறார்.

போரின் வெற்றிக்கு பின் தனது தந்தைக்கும், சோழ நாட்டிற்கும் துரோக சதி நடக்கவிருப்பதை அறிந்துகொள்ளும் ஆதித்த கரிகாலன், தனது நண்பன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு ஒற்றனாக அனுப்பிவைக்கிறார். அங்கு சென்று தனது தந்தையையும், தங்கையையும் சந்தித்து நடக்கும் சதிகளை எடுத்துக்கூற ஆணையிடுகிறார்.

 

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் | Ponniyin Selvan Review

இதனால் தஞ்சைக்கு புறப்படும் வந்தியத்தேவன் காவிரியின் அழகையும், பெண்களையும் ரசித்துக்கொண்டே கடம்பூர் சம்புவரையர் மாளிகையை அடைகிறார். அங்கு சுந்தர சோழருக்கு பின் மதுராந்தகன் தான் அரசனாக வேண்டும் என்று பெரிய பழுவேட்டரையறுடன் சிற்றரசர்கள் பலர் இணைந்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். இதை ஒரு புறம் வந்தியத்தேவன் மறைந்திருந்து பார்க்க மற்றொரு புறம் ஆழ்வார்கடியானும் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இதன்பின் தனது பயணத்தை தொடரும் வந்தியத்தேவன் வழியில் நந்தினியை சந்திக்கிறார். அதன்பின் சோழ அரசர் சுந்தர சோழரை சந்திக்கும் வந்தியத்தேவன், சோழ குலத்திற்கு ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை எடுத்துரைக்கிறார். அரசரை சந்தித்த கையோடு சில நாடகங்களுக்கு பின் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன், அவளிடம் தனது மனதை பறிகொடுக்க, குந்தவையும் அவனிடம் காதலில் விழுகிறாள்.

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் | Ponniyin Selvan Review

குந்தவையிடம் செய்தியை சேர்த்த வந்தியத்தேவனிடம், தனது தம்பி அருண்மொழி வர்மன் இலங்கையில் இருக்கிறார் அவரை தஞ்சைக்கு அழைத்து வரும்படி அன்பு கட்டளை இடுகிறார் குந்தவை. காதலியின் உத்தரவை மீறாமல் இலங்கைக்கு பூங்குழலியின் படகில் செல்கிறார் வந்தியத்தேவன். இலங்கையில் கால்பதிக்கும் வந்தியத்தேவன், அருண்மொழி வர்மனை சந்திக்கிறார். அதே சமயம் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள் மொழி வர்மனையும், சோழ நாட்டின் அரசர் சுந்தரச்சோழரையும் கொலை செய்ய சபதம் எடுக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் | Ponniyin Selvan Review

இதில் முதலாக அருண்மொழி வர்மனை கொலை செய்ய இலங்கைக்கு வரும் ஆபத்துதவிகள் அருண் மொழியை கொலை செய்தார்களா? வந்தியத்தேவனுக்கும் அருண்மொழி வர்மனுக்கும் என்ன நேர்ந்தது? நந்தினியின் சூழ்ச்சியில் சோழ தேசம் என்னவானது? என்பதே முதல் பாகத்தின் மீதி கதை.. 

படத்தை பற்றிய அலசல்  

முதலில் கல்கிக்கு நன்றி. இப்பேற்பட்ட படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்ததற்காக. இரண்டாவது நன்றி இயக்குனர் மணி ரத்னத்திற்கு. இத்தகைய படைப்பை பல ஆண்டு கடும் முயற்சிக்கு பின் இயக்கி அதை திரையில் ரசிகர்களுக்கு விருந்ததாக கொடுத்ததற்காக.

ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் சில காட்சிகளில் தோன்றினாலும், பாயும் புலியாக மிரட்டுகிறார். காதல் தோல்வி, ஆக்ஷன், கோபம், வீரம், சோகம் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், இன்னும் ஆதித்த கரிகாலனை திரையில் காண்பித்து இருக்கலாம். 

 

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் | Ponniyin Selvan Review

வந்தியதேவனாக வரும் கார்த்தி படத்தில் மட்டுமின்றி நம்முடைய மனதிலும் அழகிய பயணத்தை மேற்கொண்டு அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார். காதல் மன்னனாக பெண்களிடம் நடந்து கொள்ளும் கார்த்தியின் காட்சிகள் அழகு. நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் கண்களால் மிரட்டுகிறார். நந்தினி கதாபாத்திரத்தின் வலியையும், வஞ்சத்தையும், பழிவாங்கும் உணர்வையும் அழகாய் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

பொன்னியின் செல்வன் எனும் தலைப்பிற்கு சொந்தக்காரர் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, நிதானத்தை கைவிடாமல் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்துள்ளார். ராஜ ராஜ சோழனை கண்முன் நிறுத்துகிறார். குந்தவையாக கம்பீரத்தையும், ஆளுமையையும் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் காட்டியுள்ளார் திரிஷா. காதலிலும் சரி, நாட்டிற்காக ஆற்றும் கடமையிலும் சரி திரிஷாவின் நடிப்பு அருமை. 

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் | Ponniyin Selvan Review

 

பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள சரத்குமார் சிறந்து விளங்குகிறார். நந்தினியின் சூழ்ச்சி வலையில் சிக்கும் கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்துள்ளார். ஆழ்வார்கடியானாக நடித்துள்ள நடிகர் ஜெயராம் அனைவரின் மனதிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். மனதை வருடும் சமுத்திரகுமாரி பூங்குகளியாக நடித்த ரசிகர்களின் மனதையும் திருடிவிட்டார் ஐஸ்வர்யா லட்சுமி.  வில்லன் ரவிதாசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிஷோர் தனக்கு கொடுத்ததை கரெக்ட்டாக செய்துள்ளார்.

சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன், சுந்தர சோழர் பிரகாஷ் ராஜ், பெரிய வேளாளர் பிரபு, மலையமானாக லால், வானதியாக நடித்துள்ள சோபிதா, பார்திப்பேந்திரா பல்லவராக நடித்துள்ள விக்ரம் பிரபு, மதுராந்தகனாக வரும் ரஹ்மான் என அனைவரும் தங்களது கடமையை அருமையாக செய்துள்ளார்கள்.

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் | Ponniyin Selvan Review

 

மணி ரத்னத்தின் இயக்கம் பட்டையை கிளப்பியுள்ளது. ஜெயமோகன், குமரவேல், மணிரத்னத்தின் திரைக்கதை பிரமாதம். பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற சில காட்சிகள் படத்தில் இடம்பெற வில்லை என்றாலும், படம் விறுவிறுப்பாக நகர்கிறது. தேவையான மாஸ், ஆலடிக்காக கதாபாத்திர வடிவமைப்பு, கேட்டவுடன் ரசிக்கக்கூடிய வசனங்கள் என அருமையாக படத்தை செதுக்கியுள்ளனர்.

இடைவேளை காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் திரையரங்கம் தெறிக்கிறது. ரவி வர்மனின் ஒளிப்பதிவு உலகத்தரத்தை தாண்டி நிற்கிறது. இதுதாண்டா ஒளிப்பதிவு என்று சொல்லி அடித்துள்ளார். தோட்டா தரணியின் கலை இயக்கம் பிரம்மாண்டத்தை மிஞ்சி நிற்கிறது. VFX தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பக்கா. படத்தை அற்புதமாக எடிட் செய்துள்ளார்.

 

இறுதியாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். பின்னணி இசையால் படத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்கிறார். சோழா சோழா, பொன்னி நதி என பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் ரஹ்மான் எனும் அலை புயலை வீசுகிறது.  

பிளஸ் பாயிண்ட் 

கல்கியின் கதை - மணிரத்னம், குமரவேல், ஜெயமோகன் திரைக்கதை - இயக்கம்

ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரமின் நடிப்பு

ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை, பாடல்கள்

VFX, எடிட்டிங், கலை இயக்கம், ஒளிப்பதிவு

இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சி

மைனஸ் பாயிண்ட்

பொன்னியின் செல்வனில் தவரேனும் சொல்வதற்கு மணி ரத்னம் இடம் கொடுக்கவில்லை

மொத்தத்தில் முதல் பாகத்தில் சோழன் தனது கொடியை நாட்டிவிட்டான் 

LATEST News

Trending News

HOT GALLERIES