வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம்
கவுதம் மேனன் - சிலம்பரசன் வெற்றிக்கூட்டணியில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது. வழக்கத்துக்கு மாற கதைக்களத்தில் கவுதம் மேனன், புதிய தோற்றத்தில் சிம்பு, கேங்ஸ்டர் கதைக்களம், ஏ.ஆர். ரஹ்மானின் இசை என வெந்து தணிந்தது காடு படத்தின் மீது பல எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்திருந்தனர். இத்தனை எதிர்பார்ப்புகளையும் இப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..
கதைக்களம்
தந்தையில்லாமல் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்த்து வருகிறார் முத்துவீரன் { சிலம்பரசன் }. காட்டு வேலை செய்து வரும் சிம்பு ஒரு நாள் காட்டுக்குள் பரவிய தீயில் சிக்கிக்கொண்டு, போராடி காயங்களுடன் அதிலிருந்து தப்பிக்கிறார். காட்டை சிம்பு தான் கொழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு காட்டின் முதலாளி சிம்புவிடம் நஷ்டத்திற்கு பணம் கேட்டு வந்து நிற்கிறார்.
அதெல்லாம் தர முடியாது என்று சிம்பு சொல்ல, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதத்தில் பேசாமல் போய்விட இல்லையெனில் உன்னை கொன்று விடுவேன் என்று முதலாளியை பார்த்து சிம்பு கூற, அது தாய் ராதிகாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஏற்கனவே சிம்புவின் ஜாதகத்தில் அவன் கண்டிப்பாக கொலை செய்வான் என்று இருக்கிற காரணத்தினால், இனி தன் மகன் இந்த ஊரில் இருந்தால் தவறான பாதையில் சென்று விடுவானோ என்று எண்ணி சிம்புவின் மாமா அதாவது தனது அண்ணன் மூலம் சிம்புவை மும்பைக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் ராதிகா.
இரவு மாமா வீட்டிலேயே தங்கும் சிம்புவிடம் அவரது மாமா ஒரு லெட்டரை கொடுத்து இதை எப்படியாவது போஸ்ட் செய்து விடு என்று நடுராத்திரியில் பதட்டத்துடன் சொல்கிறார். காலையில் கண்விழிக்கும் சிம்புவிற்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், தன்னை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக கூறிய தனது மாமா, தூக்குமாட்டிக்கொண்டு இறந்து போகிறார். தனது மாமாவின் இறப்பையும் தாண்டி மும்பை செல்வதில் உறுதியாக இருந்த சிம்பு மாமாவிடம் இருந்த துப்பாக்கியை துணையாக நினைத்து அதை கையோடு எடுத்துக்கொண்டு மும்பைக்கு செல்கிறார்.
அந்த விலாசத்தில் இருந்தபடி இசக்கி புரோட்டா கடைக்கு செல்லும் சிம்பு படிப்படியாக ஹோட்டல் வேலைகளை கற்றுக்கொண்டு சமையல்காரன் ஆகிறார். மும்பையில் வேலை மட்டுமின்றி காதலையும் தேடி பிடிக்கிறார் சிம்பு. ஆம், கதாநாயகி பாவையை { சித்தி இத்தானி } பார்க்கும் சிம்பு காதலில் விழுகிறார். சற்று காதலில் திளைத்திருந்த சிம்புவிற்கு மற்றொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் வந்து சேர்ந்த இடம் ஹோட்டல் மட்டுமில்லை அது ஒரு கேங்ஸ்டர் இடம் என்றும் கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள் என்றும் தெரிந்துகொள்ளும் சிம்பு உடனடியாக அங்கிருந்து புறப்படுகிறார்.
ஹோட்டலில் இருந்து புறப்படும் வேளையில் இசக்கி கேங்கை கொல்ல எதிர் கேங்கில் இருந்து ஆட்கள் ஹோட்டலில் நுழைந்து விடுகிறார்கள். தன்னை தாக்க வருபவர்களை அடிக்கும் சிம்பு, ஒரு கட்டத்தில் அவர்களை சமாளிக்க முடியாது என்று எண்ணி தன்னுடன் எடுத்த வந்த துப்பாக்கியை எடுத்து ஒவ்வொருவரையும் சுட்டு கொல்கிறார். தன் வாழ்க்கையில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதையே சிம்பு செய்துவிட்டார். இதனால், அவர் சந்தித்த விளைவுகள் என்னென்ன? அதன்பின் அவருக்கு வந்த இன்ப துன்பங்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் சிம்பு நடிப்பினால் அசரவைத்துவிட்டார். சிம்புவின் நடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்க்ரீன் தெறிக்கிறது. தயக்கம், கோபம், சுயமரியாதை, ரொமான்ஸ், காதல், ஆக்ஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார். கிட்டத்தட்ட பாதிப்படத்தை தாங்கி நிற்கிறார் என்று கூட சொல்லலாம்.
கதாநாயகியாக வரும் சித்தி இதானி முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டு விட்டார். அழகான நடிப்பை அளவாக கொடுத்து கைதட்டல்களை சொந்தம்மாக்கியுள்ள சித்தி இதானி. சிம்புவின் அம்மாவாக நடித்துள்ள ராதிகா வழக்கம் போல் நடிப்பில் தனித்து நிற்கிறார். மகனுக்காக போராடும் தாயை கண்முன் நிறுத்திவிட்டார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நீரஜ் மாதவ்வின் நடிப்பு சூப்பர். சிறப்பாக நடித்துள்ள நடிகர் அப்புகுட்டிக்கு தனி பாராட்டுக்கள். எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிவிட்டார் நடிகர் ஜாஃபர் சாதிக். மற்றபடி கதையில் வந்த முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் ஓட்டத்துடன் ஒன்றிப்போகிறார்கள்.
இயக்குனர் கவுதம் மேனன் மீண்டும் தனது வெற்றி கூட்டணியை நிலைநாட்டியுள்ளார். சிறப்பான கதையை அமைத்துக்கொடுத்த ஜெயமோகனுக்கு நன்றி. திரைக்கதை, இயக்கம் என பின்னியெடுக்கிறார் கவுதம் மேனன். படம் மெதுவாக நகர்ந்தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. பாடல்கள் இடம்பெற்றாலும் அனைத்தும் கதைக்குள் அடங்குகிறது. குறிப்பாக இப்படத்தில் எந்த ஒரு வாய்ஸ் ஓவரும் இல்லை. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் இரண்டையும் வெறித்தனமாக செதுக்கியுள்ளார் கவுதம் மேனன். வெந்து தணிந்தது காடு பார்ட் 1 முடிவடைத்திருந்தாலும், பார்ட் 2 இனிமேல் தான் ஆரம்பம் என்று மாஸாக படத்தை முடித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள், இசை இரண்டுமே டாப் கிளாஸ். குறிப்பாக முதல் பாதியில் வரும் 'மல்லிப்பூ' மற்றும் 'அடங்காத ராட்டினத்தில்' பாடல்களும், இரண்டாம் பாதியில் இடம்பெறும் 'காலத்துக்கும் நீ வேணும்' பாடலும் வேற லெவல். பின்னணி இசை படத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்கிறது. சித்தார்த்தின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. ஆண்டனியின் எடிட்டிங் பக்கா. Yannick Ben மற்றும் Lee Whittaker-ன் ஸ்டண்ட் மிரட்டுகிறது. மேலும் குறிப்பாக காஸ்ட்யூம் டிசைனர் உத்ரா மேனனுக்கு பாராட்டு.
பிளஸ் பாயிண்ட்
சிம்பு, ராதிகா, சித்தி இதானி நடிப்பு
ஜெயமோகனின் கதை
படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்
இயக்குனர் கவுதம் மேனனின் மிரட்டலான இயக்கம், அழகான திரைக்கதை
மிரட்டலான சண்டை காட்சிகள்
காஸ்ட்யூம் டிசைன்
இண்டர்வல் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி
மைனஸ் பாயிண்ட்
ஆங்காங்கே மெதுவாக செல்லும் திரைக்கதை. ஆனால், அது படத்திற்கு தேவையானதாக மட்டுமே அமைந்துள்ளதால் அதை மைனஸ் பாயிண்டாக எடுத்துக்கொள்ள முடியாது.
மொத்தத்தில் கவுதம் மேனன் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் :
இப்படத்தில் கதை இருக்கிறதா என்று கேட்டால், இல்லை இப்படத்தில் கதை இல்லை, வாழ்க்கை தான் இருக்கிறது. முத்துவீரன் என்பவனின் வெந்து தணியும் வாழக்கை. அற்புதமான வாழ்க்கை..