கசட தபற திரைவிமர்சனம்

கசட தபற திரைவிமர்சனம்

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கசட தபற. 6 கதைகளை கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரேம்ஜியின் உதவும் மனப்பான்மையை பார்த்து காதலிக்கிறார் ரெஜினா. இருவரும் காதலித்து வரும் நிலையில், ரெஜினாவின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேம்ஜி மீது திருட்டு பட்டம் கட்டி அடியாட்களை வைத்து கடத்திவிடுகிறார்.

கவசம் என்ற தலைப்புடன் தொடங்கும் இந்த கதை, மற்ற 5 கதைகளுடன் சேர்ந்து பயணிக்கிறது. இறுதியில் பிரேம்ஜி என்ன ஆனார்? பிரேம்ஜி, ரெஜினாவின் காதல் ஒன்று சேர்ந்ததா? மற்ற கதைகளின் கதாபாத்திரங்கள் எப்படி இவர்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கவசம் கதையில் வரும் பிரேம்ஜி சிறந்த நடிப்பையும், ரெஜினா அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சதியாடல் கதையில், மகன் மீது அதிக பாசம் வைத்து இருக்கும் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் சம்பத். மகனாக வரும் சாந்தனுவின் நடிப்பு அசத்தல். செண்ட்ராயன் ரசிகர்களை கவர்ந்துருகிறார்.

தப்பாட்டம் கதையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் சந்தீப் கிஷன், மேல் அதிகாரியின் அழுத்தம், குடும்பத்தினரின் அழுத்தம் என்று நடிப்பில் அசத்தி இருக்கிறார். கணவர் மீது அக்கறை கொண்டவராக வரும் பிரியா பவானி சங்கரின் நடிப்பும் அருமை.

பந்தயம் கதையில், ஹரீஷ் கல்யாணின் நடிப்பு பாராட்டுக்குரியது. அறம்பற்ற கதையில் விஜயலட்சுமியும், அக்கற கதையில் வெங்கட் பிரபுவும் நடிப்பில் பின்னி எடுத்துருக்கிறார்கள். இந்த 6 கதையை திரைக்கதையாக உருவாக்க இயக்குனர் சிம்பு தேவன் கொடுத்த உழைப்பு படத்தில் தெரிகிறது.

தெளிவான திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோரின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் கசட தபற 'சிறந்த ஒன்று'

Rating 3/5

LATEST News

Trending News

HOT GALLERIES