சைக்கோ கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண் - நெற்றிக்கண் விமர்சனம்
சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாரா, ஒரு விபத்தில் அவரது கண்களை இழக்கிறார். கண்களை இழந்ததால் வேலையும் பறிபோகிறது. கண் பார்வை திரும்ப பெற சிகிச்சை பெற்று வரும் நயன்தாரா, ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது இளம் பெண்களை கடத்தி சித்ரவதை செய்து வரும் அஜ்மல், நயன்தாராவை பார்த்தவுடன் அவரையும் கடத்த முயற்சி செய்கிறார். தன்னை டாக்ஸி டிரைவர் என்று அறிமுகம் செய்துக் கொண்டு நயன்தாராவை காரில் அழைத்து செல்கிறார் அஜ்மல். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தில் நயன்தாராவை ரோட்டில் விட்டு சென்று விடுகிறார் அஜ்மல். இந்த விபத்து குறித்து போலீசில் எஸ்.ஐ.யாக இருக்கும் மணிகண்டனிடம் புகார் கொடுக்கிறார் நயன்தாரா. போலீஸ் தேடுவதை அறிந்த அஜ்மல், நயன்தாராவை பழிவாங்க முயற்சி செய்கிறார். இறுதியில் நயன்தாராவை அஜ்மல் பழிவாங்கினாரா? போலீஸ் துணையுடன் அஜ்மலை நயன்தாரா கண்டுபித்தாரா? இளம் பெண்களை அஜ்மல் கடத்தி சித்ரவதை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா, பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் கம்பீரமாக தோற்றமளிக்கும் நயன்தாரா, கண்பார்வை போன பிறகு பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். பார்வையற்றவராக திரையில் தடுமாறும் போது, பார்ப்பவர்களையே பார்த்து பார்த்து என்று சொல்ல வைக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து உயிரூட்டிருக்கிறார்.
சைக்கோ வில்லனாக அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார் அஜ்மல். பெண்களை கவரும் போது அப்பாவி போலவும், நயன்தாராவை பழி வாங்க துடிக்கும் போது வில்லத்தனமான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். போலீசாக வரும் மணிகண்டன் வெகுளித்தனமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.
பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மிலிந்த் ராவ். தமிழுக்காக சில மாற்றங்கள் செய்திருக்கும் இயக்குனர், திரைக்கதையின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். பார்வையற்றவர்கள் எப்படி வாழ்க்கையில் நடந்துக் கொள்கிறார்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்பதை தீவிரமாக ஆராய்ந்து காட்சிப்படுத்தி இருப்பது அருமை. படம் ஆரம்பத்திலேயே கதை தெரிந்துவிட்டதால், திரைக்கதையில் அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். இவர்களின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘நெற்றிக்கண்’ பார்வை சற்று குறைவு.