நவரசா திரைவிமர்சனம்
மணிரத்னம் மற்றும் Jayendra Panchapakesan இருவரும் இணைந்து தயாரித்து நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் தான் நவரசா. நடிப்பில் கூட்டப்படும் ஒன்பது ரசங்களை மையப்படுத்தி, திரையுலகை சேர்ந்த சிறந்த இயக்குனர்களின் இயக்கத்தில் ஒன்பது படங்கள் இதில் வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான வகையில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள நவரசா, எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..
1. எதிரி - ரசம் [கருணை]
கதைக்களம்
கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவியான ரேவதியும், பிரகாஷ் ராஜும் நீண்ட நாட்களாக பேசி கொள்ளாமல் இருக்கின்றனர். இவர்களின் மகனாக வருகிறார் அசோக் செல்வன். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரேவதியின் வீட்டுக்கு வருகிறார். அவரை வரவேற்று தனது அறைக்கு அழைத்து செல்கிறார் பிரகாஷ் ராஜ்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்ற சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து சத்தம் கேட்கிறது. இதையடுத்து ரேவதி அந்த அறைக்கு சென்று பார்க்கும் போது பிரகாஷ் ராஜ் இறந்து கிடக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி எதற்காக பிரகாஷ் ராஜை கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சற்று வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதேபோல் கணவன் மனைவியாக நடித்திருக்கும் ரேவதியும், பிரகாஷ் ராஜும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அசோக் செல்வன் குறைந்த காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள இப்படத்தை கருணை உணர்வை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார். நடிகர்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஆனால் திரைக்கதையில் சற்று வேகத்தை கூட்டி இருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி உள்ளது.
மொத்தத்தில் எதிரி 'சுவாரஸ்யமில்லை'
2. சம்மர் ஆஃப் 92 - ரசம் [நகைப்பு]
கதைக்களம்
சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார். அந்த விழாவில் சிறப்புரையாற்றும் யோகிபாபு, தான் பள்ளியில் படித்தபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
யோகிபாபுவின் பள்ளிப்பருவ ஆசிரியரான ரம்யா நம்பீசன் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க யோகிபாபுவும் ஒரு விதத்தில் காரணம். அது என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஆசிரியராக வரும் ரம்யா நம்பீசன், இளம் வயது மற்றும் வயதான தோற்றம் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் யோகி பாபு சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. யோகிபாபுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.
நகைப்பு என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். எடுத்துக்கொண்ட கதைக்களம் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவு கதையுடன் ஒன்றி நம்மை பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில் சம்மர் ஆஃப் 92 'நகைச்சுவை ட்ரீட்'
3. புராஜெக்ட் அக்னி - ரசம் [ஆச்சிரியம்]
கதைக்களம்
விஞ்ஞானியாக வரும் அரவிந்த்சாமி, ஒரு அதிசயமான விஷயத்தை கண்டுபிடிக்கிறார். அதுபற்றி பேச தனது நண்பரான பிரசன்னாவுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் கண்டுபிடித்தது என்ன?, அதனால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அவர் இழந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஞ்ஞானியாக வரும் அரவிந்த் சாமியும், அவரது நண்பராக வரும் நடிகர் பிரசன்னாவும் ஹாலிவுட் நடிகர்களின் பாணியில் நடித்துள்ளனர். அலட்டிக்கொள்ளாத நடிப்பில் அனைவரையும் ஈர்க்கின்றனர். பூர்ணா கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
ஆச்சரியத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். வித்தியாசமான கதைக்களத்தில், தனித்து நிற்கிறது புராஜெக்ட் அக்னி. படத்தின் திரைக்கதையை வடிவமைத்ததற்கு இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு பாராட்டு.
குறிப்பாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பார்க்காதது. ரான் எத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு காட்சிகள் விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் புராஜெக்ட் அக்னி ' எதிர்பாரா ஆச்சிரியம்'
4. பாயாசம் - ரசம் [அருவருப்பு]
கதைக்களம்
திருமணமான 3 மாதங்களில் கணவரை இழந்து விதவை ஆகி விடுகிறார் அதிதி பாலன். இவரின் தாய் தந்தையாக டெல்லி கணேஷும், ரோகினியும் நடித்துள்ளார்கள். மகளின் நிலைமையை நினைத்து தினமும் தவித்து வருகிறார் டெல்லி கணேஷ். இந்த சமயத்தில் டெல்லி கணேஷின் அண்ணன் பேத்திக்கு திருமணம் நடக்கிறது.
தனது மகளின் நிலை மட்டும் இப்படி இருக்கும்பொழுது, தன் அண்ணன் குடும்பம் சந்தோஷமாக இருக்கலாமா என்ற மனநிலையில் இருக்கும் டெல்லி கணேஷ், அந்த திருமணத்தில் வேண்டா வெறுப்புடன் கலந்து கொள்கிறார். இதையடுத்து அந்த திருமணத்தில் அவர் என்ன செய்தார்? திருமணத்தில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகிணி ஆகியோரின் 1965ஆம் வாழ்ந்து வந்த மக்களை போலவே எதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளனர். விதவையாக நடித்திருக்கும் அதிதி பாலன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார்.
தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் டெல்லி கணேஷ். அருவருப்பு என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த். 1965-களில் நடப்பது போன்று திரைக்கதையை அமைத்துள்ளார். திரைக்கதை ஓகே.
படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன்கள் மிக அருமை. நம்மை 1956-ற்க்கே கொண்டு செல்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் பாயசம் ' பரவாயில்லை '
5. அமைதி - ரசம் [அமைதி]
கதைக்களம்
ஈழத்தமிழர்களான கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் போர் சூழலில் எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் எல்லை பகுதியை கடக்க முயல்கிறான். இதை பார்த்த பாபி சிம்ஹா, அந்த சிறுவனை பிடித்து விசாரிக்கின்றார்.
எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டில் தனது தம்பி மாட்டிக்கொண்டதாகவும், அவனை மீட்க தான் செல்வதாகவும் அந்த சிறுவன் கூறுகிறான். ‘நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள்’ என அந்த சிறுவனை, கவுதம் மேனன் எச்சரிக்கிறார்.
ஆனால், அந்த சிறுவனுக்காக பாபி சிம்ஹா ரிஸ்க் எடுக்கிறார். எல்லைக்கு அப்பால், அந்த சிறுவன் கூறிய இடத்துக்கு உயிரைப் பணயம் வைத்து செல்லும் பாபி சிம்ஹாவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் ஈழத்தமிழர்களாக நடித்துள்ளனர். வழக்கமாக ஆங்கிலம் கலந்த தமிழை பேசும் கவுதம் மேனன், இந்த படத்தில் ஈழத்தமிழை பேசியுள்ளார். பாபி சிம்ஹாவும் நேர்த்தியாக நடித்துள்ளார். சிறுவன் தருணும் இயல்பாக நடித்து அசத்தி உள்ளார்.
அமைதியை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். திரைக்கதையில் எந்தஒரு தவறுமில்லை.சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் அமைதி ' சிறப்பு '
6. ரெளத்திரம் - ரசம் [கோபம்]
கதைக்களம்
நடிகர் ஸ்ரீராம், தங்கை மற்றும் தாயாருடன் மிடில் க்ளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் காசு வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்ரீராமின் தாயார் செல்கிறார்.
சொன்னபடியே அவர் காசு வாங்கி கொண்டு வந்தவுடன் குடும்பம் மகிழ்ச்சியாக மாறுகிறது. அந்த காசை வைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக ஊர் சுற்றி பார்க்கின்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் தனது தாயாருக்கு எப்படி காசு கிடைத்தது என்பது ஸ்ரீராமுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடையும் ஸ்ரீராம், கோபத்தின் உச்சத்துக்கு சென்று ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்விகா, அதற்கு ஏற்றார் போல் வெறப்பாகவும், கோபத்துடனும் நடித்துள்ளார். மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீ ராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கந்துவட்டிக்காரராக வரும் அழகம் பெருமாள் இயல்பாக நடித்துள்ளார். ‘கோபம்’ என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார் அரவிந்த் சாமி. இது அவரின் இயக்கத்தில் வரும் முதல் படமாக இருந்தாலும், சிறப்பாக எடுத்துள்ளார்.
கடைசியில் திரைக்கதையில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் எதிர்பாராதது. ரித்விகாவின் கதாபாத்திரத்தை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மொத்தத்தில் ரெளத்திரம் ' சூப்பர் '
7. இன்மை - ரசம் [பயம்]
கதைக்களம்
நடிகை பார்வதியின் கம்பெனியில் வேலை பார்க்கிறார் சித்தார்த். இவர் வேலை விஷயமாக ஒரு கையெழுத்து வாங்க பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார். அப்போது இருவரும் பேசி கொள்கின்றனர்.
அந்த சமயத்தில் பார்வதி இளம் வயதில் செய்த சில விஷயங்களை சித்தார்த் சொல்ல ஆரம்பிக்கிறார். அதை கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் சித்தார்த்துக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்பதை பார்வதி கண்டுபிடித்தாரா? அவர் அச்சப்படுவதற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சித்தார்த்தும், பார்வதியும் நடிப்பு எப்போதும் போல் சூப்பர். அதிலும் பார்வதியின் பழைய வாழ்க்கையைப் பற்றி சித்தார்த் சொல்லச் சொல்ல பார்வதி தவிக்கும் தவிப்பு, அவரது நடிப்பில் சிறந்த ஒன்று. இவருக்கு இணையாக சிறு வயது பார்வதியாக வரும் அம்மு அபிராமியும் நடித்து இருக்கிறார்.
நவசரத்தில் பயம் என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத். ஒரு 30 நிமிட கதையில் முழு நீளப் படத்துக்கு உண்டான சுவாரசியத்தை கொடுத்திருக்கிறார். விஷால் பரத்வாஜின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பு.
மொத்தத்தில் ‘இன்மை’ சிறந்த ஒன்று.
8. துணிந்த பின் - ரசம் [வீரம்]
கதைக்களம்
திருமணம் முடிந்த கையோடு ராணுவத்தில் சேர்கிறார் அதர்வா. அதர்வாவின் மனைவியாக வரும் அஞ்சலி, தங்களது முதல் பிள்ளையை நிறைமாதல் சுமந்துகொண்டு இருக்கிறார்.
அந்த சமயத்தில் ஒரு காட்டுப் பகுதியில் நக்சலைட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சண்டையிடுகிறார்கள். அந்த குழுவில் புதிதாக ராணுவத்தில் சேர்ந்துள்ள அதர்வாவும் இருக்கிறார். அந்த சண்டையில் நக்சலைட் கும்பலைச் சேர்ந்த கிஷோர் அதர்வாவிடம் பிடிபடுகிறார்.
அப்போது குண்டடிபட்ட நிலையில் இருக்கும் கிஷோரை மருத்துவமனைக்கு அதர்வா அழைத்து செல்லும் சூழல் உருவாகிறது. மருத்துவமனை 30கி.மீ அப்பால் உள்ளது. கிஷோருடன், அதர்வா மருத்துவமனைக்கு செல்கிறார். அதன்பின் என்னவானது? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நாயகன் அதர்வா, ராணுவ வீரராக நடித்துள்ளார். அதற்கேற்ற உடல்மொழியுடன் இருப்பதால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் . நக்சலைட்டாக வரும் கிஷோர், தனது எப்போதும் போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஞ்சலிக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.
வீரம் என்ற உணர்வை வைத்து 'துணிந்த பின்' என்ற கதையை இயக்கியுள்ளார் சர்ஜுன். படத்தில் சில காட்சிகள் ரசிகர்களுக்கு பிடித்தவாறு இருந்தாலும், வீரம் என்கிற உணர்வை சரியாக வெளிப்படுத்த முடியாமல் திணறி உள்ளார் இயக்குனர் சர்ஜுன். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும், சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் அற்புதம்.
மொத்தத்தில் துணிந்தபின் 'வீரமில்லை'
9. கிட்டார் கம்பி மேலே நின்று - ரசம் [காதல்]
கதைக்களம்
இசையமைப்பாளராக இருக்கும் சூர்யா, லண்டன் சென்று தனது இசையை உலகமுழுக்க பரப்பவேண்டும், இசையில் சாதிக்க என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவரது தாயார் அவருடன் வர மறுப்பதால் அவர் தன்னுடைய ஆசையை தள்ளி போட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் ஆசையை புரிந்துகொண்டு அவரது தாயார் லண்டன் செல்ல சம்மதிக்கிறார்.
அதே நாளில், சூர்யா இசையில் பாடுவதற்கான வாய்ப்பு நாயகி பிரயாகாவுக்கு கிடைக்கிறது. சூர்யாவின் ஸ்டுடியோவிற்கு பிரயாகா வருகிறார். பார்த்தவுடன் இவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இருவரும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. அப்போது பிரயாகாவுடன் பேச ஆரம்பிக்கும் சூர்யா, அவரும் தன்னை போலவே லண்டன் சென்று இசையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பதை அறிகிறார்.
இசை மீது ஆர்வம் கொண்ட இருவரும், மனம்விட்டு பேச ஆரம்பிக்கின்றனர். அப்போது, தனது தாய் பேசியதை போலவே பிரயாகா பேச, அவர் வியப்படைகிறார். ஒரு கட்டத்தில் காதலை பிரயாகா சூர்யாவிடம் வெளிப்படையாக கூறிவிடுகிறார். ஆனால், சூர்யா தனது காதலை கூறினாரா இல்லையா? இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? சூர்யா லண்டன் போனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நாயகன் சூர்யா, வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்ததை போன்று ரொமாண்டிக் ஹீரோவாக பளிச்சிடுகிறார். அவருக்கும் பிரயாகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
நாயகி பிரயாகா கண்களால் பேசும் காதல் வசங்கள் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. காதல் என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். காதல் படம் எடுப்பதில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கார்த்திக்கின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் கிட்டார் கம்பி மேலே நின்று கமல் {சூர்யா} வாசித்த இசை 'இனிமை'.