தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது.. காரணங்களை அடுக்கும் சீரியல் நடிகர்.. பாசிட்டிவ்வா பேசிட்டாரு
சென்னை: தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அவற்றில் தனுஷின் ராயன், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுக்கும் விருது கொடுக்கப்பட்டத பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. தனுஷுகூட திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசியிருந்தார். இந்நிலையில் சீரியல் நடிகர் வேணு அரவிந்த் இந்த விஷயம் தொடர்பாக பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை எடுத்திருப்பவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். மேலும் விசாரணை படத்துக்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் ராயன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கும் விருதுகளை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடும் விமர்சனம்: இதை பார்த்த பலரும் ராயனுக்கும், கேப்டன் மில்லருக்கும் தேசிய விருது கொடுக்கும் அளவுக்கு அந்தப் படங்களில் ஒன்றுமே இல்லை; அந்தப் படங்களைவிடவும் தகுதியான பல படங்கள் வந்திருக்கின்றன என்று கொந்தளித்தார். மேலும், ஜூரிக்களில் ஒருவராக இருந்த கலா மாஸ்டரையும் பலர் கிழித்தெடுத்துவிட்டனர். இயக்குநர் இரா.சரவணன் கூட இந்த விவகாரத்தில் சில அதிரடி கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
தனுஷின் பேச்சு: தொடர்ந்து இந்தப் பிரச்னை பெரிதாகிக்கொண்டே போனது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் தன் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடந்த ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தனுஷ். அப்போது தன் ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், "ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது கொடுத்தார்கள். அந்தப் படங்களை விட தகுதியான படங்கள் வந்திருக்கின்றன. ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.
தட்டிக்கொடுங்கள்: அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, வடசென்னை, கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கவில்லை. அப்போது ஏன் கொடுக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இப்போது ஏன் கொடுத்தீர்கள் என கேட்கிறார்கள். தட்டிவிடாதீர்கள்; தட்டிக்கொடுங்கள்" என அதிரடியாக தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் அப்ளாஸ் நிறையவே விழுந்தன. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான வேணு அரவிந்த்தும் இந்த தேசிய விருது சர்ச்சை குறித்து பேசியிருக்கிறார்.வேணு சொன்னது: அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசுகையில், "ராயன் படத்துக்கு ஏன் தேசிய விருது என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதுதொடர்பாக நிறைய மீம்ஸ்களையும் பார்க்கிறேன். ஏன் ஜூரிக்கள் அந்தப் படத்துக்கு விருது கொடுத்தார்கள் என்பது குறித்து எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். முதலில் ராயன் படத்துக்கு கிடைத்திருக்கும் விருது சிறந்த தமிழ் பட பிரிவில். ராயன் ஒரு பாதுகாப்பான கமர்ஷியல் படம் இல்லை. படத்தின் அறிமுக காட்சி எல்லாம் ரொம்பவே நார்மலாக இருக்கும்.
இரண்டாவது இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர். அனைத்து விமர்சனங்களிலும் பொதுவாக இருந்தது என்னவென்றால் ரஹ்மானின் பிஜிஎம், பாடல்கள் சூப்பர் என்பதுதான். ஓம் பிரகாஷின் கேமராவும் சூப்பராக இருந்தது. இவை அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் இரண்டாவது பாதியும், க்ளைமேக்ஸும் வீக் என்று எல்லோரும் உணர்ந்தார்கள். ராயன் அனைத்திலும் சிறந்த படம் என்று கொடுக்கவில்லை. Raw Craft, Directorial Courageக்கு கொடுத்த மாதிரிதான் தோன்றுகிறது எனக்கு" என்றார்.