OM First Single - தனுஷ் நடிக்கும் ஓம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் சூப்பர்.. சாய் அபயங்கரின் வெறித்தனம்
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ஓம். இதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அமரன் மாதிரியே இதுவும் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. படமானது அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில்; இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.
தனுஷுக்கு பெரிய வெற்றி என்று சமீபமாக எதுவும் கிடைக்கவில்லை. அவரே இயக்கி நடித்த இட்லி கடை வெற்றியடைந்தாலும் விமர்சனத்தையும் பலமாகவே சந்தித்தது. அதற்கு முன்னர் அவர் இயக்கிய ராயனும் படுத்துவிட்டது. மேலும் தேரே இஷ்க் மெய்ன், குபேரா போன்ற படங்களும்; இளம் இயக்குநருடன் வேலை பார்த்த கர திரைப்படமும் சுத்தமாக காலி செய்துவிட்டன. இதனால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உழைத்துவருகிறார்.

தனுஷின் ஓம்: அந்தவகையில் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனைவருமே இந்திய அளவில் பெயர் பெற்றவர்கள். தங்கள் திறமையை பலமுறை காண்பித்து அப்ளாஸை அள்ளியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் எல்லாம் ஒரே படத்தில் சங்கமித்திருப்பது பலரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
என்ன கதை?: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகின. க்ளிம்ப்ஸ் காட்சிகளை பார்க்கும்போது, இது ஆந்திராவில் செம்மரங்களை கடத்தியதாக கொல்லப்பட்ட தமிழர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்குமோ என தோன்றுகிறது. ஏற்கனவே இதற்கு முன்னர் ராஜ்குமார் இயக்கிய அமரன் படமும உண்மை கதைதான். எனவே அந்த சென்ட்டிமென்ட் படியும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை ரசிகர்களிடம் விதைத்திருக்கிறது.
இன்று பிறந்தநாள்: படமானது அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகிறது. போட்டிக்கு ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படமும் வருகிறது. எனவே தனுஷ் Vs ரஜினி போட்டியில் யார் வெல்வாரோ?.. சூழல் இப்படி இருக்க இன்று தனுஷ் தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறர். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை கூறிவருகிறார்கள். இந்நிலையில் இன்று படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்: அதன்படி Alaakka Loova என்ற பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. பாடலை சாய் அபயங்கரே பாடியிருக்கிறார். ரோகேஷ் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ இப்போது வைரலாக தொடங்கியிருக்கிறது. அதேசமயம் பாடலின் ஆரம்ப வரிகள் எல்லாம் சுத்தமாக புரியவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.