வசமாக சிக்கிய துல்கர் சல்மான்.. மகனின் ஆசையால் மாட்டும் மம்முட்டி.. என்ன காரணம் தெரியுமா..?
பூடானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களை முறைகேடாக விற்றதாகக் குற்றச்சாட்டில் கேரளாவில் உள்ள தொழிலதிபர்கள், நடிகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறிவைத்து சுங்கத்துறை அதிகாரிகள் 'ஆபரேஷன் நம்கூர்' என்ற பெயரில் நடத்தி வரும் சோதனைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மலையாள முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் வீடுகளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் துல்கரின் லேண்ட் ரோவர் டிபெண்டர் காரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பூடான் நாட்டில் இரானுவ அதிகாரிகள் பயன்படுத்திய சொகுசு கார்களை குறைந்த விலையில் வாங்கி, அவற்றை இமாச்சல் பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் கார்களை கேரளாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபல நடிகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாங்கியதாகத் தெரிகிறது.
இதனால் அரசுக்கு முறையாக வரி செலுத்தப்படாமல் கோடிக்கணக்கான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன. இந்த முறைகேடுகளை வெளிச்சம் போட 'ஆபரேஷன் நம்கூர்' சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்றைய சோதனைகள் கோழிக்கோடு, மலப்புரம், திரிச்சூர், கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்றன. கொச்சியில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் காரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, துல்கரின் தந்தை மம்மூட்டியின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு எந்தக் காரையும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றாலும், தொடர்புடைய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.இதேபோல், பிரித்விராஜின் வீட்டிலும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மொத்தம் 10 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கேரளாவின் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, இந்த சோதனைகள் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத இறக்குமதி தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன.
"இந்த விசாரணை முறைகேடுகளை வெளிப்படுத்தி, அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய உதவும்," என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நடக்கும் சோதனைகளில் மேலும் சிலர் குறிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் மலையாள சினிமாவின் பிரபலங்கள் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. பொது மக்களிடையே வரி ஏய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.