ரோபோ ஷங்கர் உயிரிழப்பின் பகீர் பின்னணி வெளியானது..! இதை செய்ததால் தான் இழப்பா..?
மதுரையின் மண்ணில் பிறந்து, கலை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்தவர் ரோபோசங்கர். 46 வயதில் அவரது மறைவு தமிழ் சினிமாவையும் கலை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய சங்கர், 1997ஆம் ஆண்டு சென்னைக்கு சினிமா கனவுகளுடன் வந்தார். அவரது உழைப்பும், தனித்துவமான திறமையும் அவரை ‘ரோபோசங்கர்’ என்ற பெயரில் ரசிகர்களின் இதயங்களில் நிறுத்தியது.
ரோபோசங்கரின் கதை ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண பயணம். மதுரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஒரு நாளைக்கு 75 முட்டை வெள்ளைக்கரு உண்டு உடலை வலுப்படுத்தியவர், நடிகர் கமல்ஹாசனை தனது மானசீக குருவாக ஏற்று, உடல் முழுவதும் மெட்டல் பெயிண்ட் பூசி ரோபோ போல மேடைகளில் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த தனித்துவமான பாணியால் ‘ரோபோசங்கர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். சினிமாவில் அவரது முதல் பயணம் ‘தர்மசக்கரம்’ படத்தில் ஒரு துணை நடிகராக கூட்டத்தில் தோன்றியது. ஆனால், அவரது உண்மையான திறமை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி வெளிப்பட்டது.
குறிப்பாக, விஜயகாந்தின் குரலை அப்படியே பிரதிபலித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். “ஜாதி ஜாதிங்கிறியே, ஜாதியாடா உன்ன பெத்துச்சு கொம்மாடா மடையா...” என்று அவர் பேசிய வசனங்கள் மேடைகளில் எதிரொலித்தன.2002ஆம் ஆண்டு, கலை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த நடனக் கலைஞர் பிரியங்காவை காதலித்து திருமணம் செய்தார்.
அவர்களது காதல் கதை, அவரது கலைப் பயணத்தைப் போலவே இனிமையானது. ‘தீபாவளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார’, ‘மாரி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையை பதித்தார்.
அஜித், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.ஆனால், வாழ்க்கை எப்போதும் சுலபமாக இருக்கவில்லை. இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றபோது, நண்பர்களுடன் மதுவுக்கு அடிமையானார்.
இதனால் உடல் எடை கூடி, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின், நடிகர் தனுஷின் நிதி உதவியால் மீண்டு வந்தார். தனது மகள் இந்திரஜாவை ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மாளாக நடிக்க வைத்து, அவருக்கு ஊர்மெச்ச திருமணமும் செய்து வைத்தார்.
அந்த திருமணத்தில் மனைவியுடன் சேர்ந்து ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது.மது பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு, உடல் எடையைக் குறைத்து மீண்டும் திரையில் தோன்றினார்.
ஆனால், உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. அண்மையில் இளையராஜாவின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ஆசி பெற்றார். செப்டம்பர் 16, 2025 அன்று, ‘காட்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்று உற்சாகமாக பேசினார்.
ஆனால், அன்று மாலையே நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெருங்குடியில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
கமல்ஹாசனால் ‘நட்சத்திரன்’ என பெயரிடப்பட்ட தனது பேரனை திரையுலகில் பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ரோபோசங்கரின் கனவாக இருந்தது.
ஆனால், 46 வயதில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது, சினிமா உலகை கலங்க வைத்திருக்கிறது. மருத்துவர்களின் அறிவுரையை புறக்கணித்து பழைய உணவு பழக்கங்களுக்கு திரும்பியதே அவரது உடல் நல பாதிப்புக்கு காரணம் என்று சிலர் கூறினாலும், பழைய நோயின் தொடர்ச்சியே அவரது மறைவுக்கு காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ரோபோசங்கர் ஒரு நடிகர் மட்டுமல்ல; மேடைகளை மிரட்டிய கலைஞன், ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடியன், குடும்பத்தை காதலித்த கணவன், தந்தை. அவரது மின்னல் வாழ்க்கை முடிந்தாலும், அவர் பதித்த முத்திரைகள் என்றும் மறையாது.