புடிக்கலனா வெளியே போ.. கொதித்த மோகன் லால்.. குவியும் பாராட்டுகள்..
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி, முன்னணி நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ஆதிலா மற்றும் நூரா என்ற பெண் ஒரு பாலின தம்பதி போட்டியாளர்களாக பங்கேற்று கவனம் பெற்றுள்ளனர்.
வைல்டு கார்டு சுற்றில் இணைந்த லக்ஷ்மி மற்றும் மஸ்தானி ஆகியோருடன் நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமடைந்தது.ஆனால், ஆதிலா மற்றும் நூராவுக்கு எதிராக போட்டியாளர் லக்ஷ்மி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. “இவையெல்லாம் நம் சமுதாயத்தில் வரவேற்கப்படக் கூடாது.
பிக் பாஸ் போன்ற பொது மேடைகளில் இதை இயல்பாக்க வேண்டியதில்லை. அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மாட்டார்கள்,” என்று லக்ஷ்மி பேசியது பெரும் விவாதத்தை உருவாக்கியது.
வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த மோகன்லால், லக்ஷ்மியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை. எல்லோரும் மனிதர்களே, எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும். அவர்களுக்கு இங்கு வாழ உரிமை உள்ளது. உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இந்த நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கிறீர்கள்? ‘அவர்களை வீட்டில் சேர்க்க மாட்டார்கள்’ என்பதை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் அவர்களை என் வீட்டிற்கு வரவேற்பேன்.
உங்களால் அவர்களுடன் இருக்க முடியாவிட்டால், நிகழ்ச்சியை விட்டு வெளியேறலாம்,” என்று காட்டமாக பேசினார். மேலும், இத்தகைய தீவிரமான விஷயத்தில் மற்ற போட்டியாளர்கள் ஏன் மௌனமாக இருந்தனர் எனவும் கேள்வி எழுப்பினார்.
மோகன்லாலின் இந்த தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, மோகன்லால் ஒரு நகை விளம்பரத்தில் பெண்ணைப் போல வைர நகைகள் அணிந்து நடித்து, “ஆண்களையும் இந்த நகை கவரும்” என்ற கருத்தை முன்வைத்து பாரம்பரிய கருத்துகளை உடைத்திருந்தார்.
இந்த விளம்பரமும் அவருக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. மோகன்லால் போன்ற மாஸ் ஹீரோ ஒருவர் சமூக மாற்றத்திற்கு ஆதரவாக செயல்படுவது பலராலும் பாராட்டப்படுகிறது.