என் தங்கைக்கு நான் செய்த கொடுமை.. தூக்கமே வரல.. அந்த பணத்தை வச்சி.. சாய் பல்லவி வேதனை..
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனித்துவமான நடிப்பு மற்றும் இயல்பான அழகால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் சமீபத்தில் ஒரு பிரபல அழகு சாதன நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்தது பெரும் பேசுபொருளாகி உள்ளது.
இந்த நிறுவனம் அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக வழங்க முன்வந்த போதிலும், சாய் பல்லவி அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதற்கு காரணமாக, அந்த விளம்பரம் "வெள்ளையாக இருந்தால் மட்டுமே அழகு" என்ற கருத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இந்த முடிவுக்கு பின்னால் ஒரு ஆழமான தனிப்பட்ட காரணமும் இருப்பதாக சாய் பல்லவி தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
சாய் பல்லவி தனது தங்கை பூஜாவுடனான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "எனது தங்கை பூஜாவுக்கு, நான் அவளை விட வெள்ளையாக இருக்கிறேன் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது. நாங்கள் இருவரும் அருகருகே நின்று கண்ணாடியில் பார்க்கும்போது, அவள் தனது நிறத்தை எனது நிறத்துடன் ஒப்பிட்டு அடிக்கடி பேசுவாள்.
ஒரு முறை அவள், 'நீ என்னை விட வெள்ளையாக இருக்கிறாய்' என்று கேட்டபோது, நான் அவளிடம், 'நீ நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும்' என்று கூறினேன். ஆனால், இதை நான் அவள் வெள்ளையாக மாற வேண்டும் என்று சொல்லவில்லை.
அவள் அசைவ உணவுகள், பர்கர் போன்றவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவாள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அப்படி கூறினேன்.
ஆனால், அவள் உண்மையாகவே வெள்ளையாக மாறுவேன் என்று நினைத்து, காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்," என்று சாய் பல்லவி வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதுவே அந்த விளம்பரத்தில் நடிக்க மறுக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
"எனது தங்கைக்கே இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்போது, நிஜமாகவே கருமையான நிறத்தில் இருப்பவர்கள் எப்படி உணருவார்கள்? அவர்கள் இதுபோன்ற விளம்பரங்களை பார்க்கும்போது எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்? வெள்ளையாக இருப்பது மட்டுமே அழகு என்று மறைமுகமாக சொல்லும் இந்த விளம்பரத்தில் நடிப்பது, எனது மனதுக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், "அந்த விளம்பரத்தில் நடித்தால், பணம் கிடைக்கும், எனது முகம் பலருக்கும் தெரியவரும். ஆனால், அந்த பணத்தை வச்சி நான் என்ன செய்யப் போகிறேன்? தினமும் மூன்று சப்பாத்தி, கொஞ்சம் சாதம் சாப்பிடுவதற்கு மேல் வேறு என்ன செய்யப் போகிறேன்? அடுத்த நாள் உணவுக்கு உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.
அப்படியிருக்க, பணத்திற்காக கருமையான நிறத்தில் இருப்பவர்களின் மனதை புண்படுத்தும், அவர்களை சங்கடப்படுத்தும் ஒரு விளம்பரத்தில் நடிக்க வேண்டுமா? இதை யோசித்தபோது, அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டேன்," என்று உறுதியாக கூறினார்.
சாய் பல்லவி மேலும் குறிப்பிடுகையில், "எனது தங்கை ஒன்றும் கருப்பு இல்லை, என்னை விட சற்று நிறம் குறைவு, அவ்வளவுதான். அவளுக்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மை இருக்கும்போது, உண்மையாகவே கருமையான நிறத்தில் இருப்பவர்கள் எவ்வளவு மன அழுத்தத்தை அனுபவிப்பார்கள்? இதனால் தான் நான் இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தேன்," என்று தனது முடிவுக்கு பின்னால் உள்ள உணர்வுப்பூர்வமான காரணத்தை விளக்கினார்.
சாய் பல்லவியின் இந்த முடிவு, சமூகத்தில் நிறத்தை மையப்படுத்திய அழகு குறித்த தவறான கருத்துகளை எதிர்த்து நிற்பதாகவும், அனைத்து நிறங்களும் அழகு என்பதை வலியுறுத்துவதாகவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அவரது இந்த மனிதநேயமிக்க அணுகுமுறை, பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.