ஸ்டார்’ பட பின்னணியில் நடந்தது என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்
நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார்.
இவர் பொறியாளன், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதே சமயம் ஹரிஷ் கல்யாண் டீசல், லப்பர் பந்து, நூறு கோடி வானவில் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதாவது முதலில், ஸ்டார் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் தான் ஹீரோ என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் சில வருடங்கள் கழித்து அந்த படம் கவின் நடிப்பில் வெளியானது. எனவே ஸ்டார் படத்திலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். ” ஸ்டார் படத்தின் போது பல விஷயங்கள் நடந்தது. சில விஷயங்கள் எனக்குத் தெரிந்தது. சில விஷயங்கள் எனக்கு தெரியாமலேயே நடந்தது. அந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட நபர் எனக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அது மட்டும் தான் பிரச்சனை. 2020லயே ஸ்டார் படத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்கி விட்டோம்.கொரோனா காலகட்டத்தினால் இதன் பணிகள் தொடராமல் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்பு ஒன்றரை வருடங்கள் கழித்து எந்த தகவலும் வரவில்லை. அதன் பிறகு ஸ்டார் படம் குறித்து அறிவிப்பு வந்தது. வேறொரு நாயகனை வைத்து படம் பண்ணுகிறோம் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. நான் வேலை என்பதை தாண்டி மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். வேலை முக்கியமாக இருந்தாலும் ஒருவரிடம் பொய்யாக பழக முடியாது. ஸ்டார் படத்தின் டிரைலர் வரும்போது ஒன்று சொன்னார்கள். படம் ரிலீஸ் ஆன பின் ஒன்று சொன்னார்கள். அதை எதுவுமே நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ஹரிஷ் கல்யாண்.