'அது நடக்கவே நடக்காது': 'அஜித் 62' படம் குறித்து விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்களில் ஓடிவருகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் அடுத்த படமான ’அஜித் 62’ படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தபோது, ‘அது நடக்கவே நடக்காது’ என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, ‘அஜித் 62’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ‘என்னுடைய ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன், அது நடக்கவே நடக்காது’ என்று பதில் கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ மற்றும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘அஜித் 62’ படத்தில் விஜய்சேதுபதி வில்லன் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.