உடம்பைத்தான் பாக்குறாங்க... நாங்க என்ன மந்திரவாதியா? கொதித்த பிபாஷா பாசு!
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி புயலான ரேஸ், ராஸ் 3 என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் நாயகியாகவும் வலம் வந்தவர் பிரபல நடிகை பிபாஷா பாசு. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு 'தேவி' என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தனது தாய்மை பயணத்தில் கவனம் செலுத்தி வந்த பிபாஷா பாசு, உடல் எடை கூடியதற்காக சோஷியல் மீடியாவில் கடுமையான 'பாடி ஷேமிங்' மற்றும் ட்ரோல்களுக்கு ஆளானார்.
இந்நிலையில், தன் மீது வீசப்பட்ட இந்தக் கொடூரமான விமர்சனங்கள் குறித்தும், சமூகத்தின் தவறான மனநிலை குறித்தும் பிரபல ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கொதித்து போய் பேசி உள்ளார். குழந்தை பெற்றதற்கு பிறகு பெண்களின் உடல் மாற்றங்கள் குறித்து பேசிய பிபாஷா பாசு, இந்த சமூகம் பெண்களின் உடலை நோக்கும் விதம் மிகவும் விசித்திரமாக இருப்பதாகக் சாடியுள்ளார்.

பிபாஷா பாசு பேச்சு: பெண்களின் உடலை பற்றி இங்கே நடக்கும் விவாதங்கள் எல்லாமே ரொம்பவே விசித்திரமானதாக உள்ளது. ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த உடனே, என்னவோ மந்திரவாதி போலத் தன் 40 வயதிலும், 20 வயதில் இருந்தது போன்ற ஸ்லிம்மான உடலமைப்பிற்கு திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். 20 வயது பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை 40 வயது பெண்ணிடமும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
கொடூரமான ட்ரோல்: குழந்தை பிறந்த பிறகு சட்டென்று பழைய உருவத்திற்கு மாறாத பெண்கள் மிக மோசமான ட்ரோலிங்கை சந்திக்கிறார்கள். என் மகள் தேவி பிறந்த பிறகு நானும் இந்த மிக கொடூரமான, தாங்க முடியாத பாடி ஷேமிங் மற்றும் ட்ரோலிங்கை அனுபவித்தேன். நான் வெளியில் செல்லும் போது கேமராமேன்கள என்னை விசித்திரமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பரப்பினார்கள். ஒரு தாய் தன் குழந்தையை வளர்ப்பதற்கும், தாய்மைக்கு மாறுவதற்கும் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதை பற்றி யாருக்கும் கவலையில்லை. எல்லாரும் உடனே பழைய பிபாஷாவாக மாற வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக அழகான தருணம். அதில் ஏற்படும் உடல் மாற்றங்களை கேலி செய்யாமல், அவர்களை கொண்டாட வேண்டும் அவர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.