என் முகத்தில் அசௌகரியம் எங்கே தெரிகிறது?” – மிஷ்கின் விவகாரத்தில் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

என் முகத்தில் அசௌகரியம் எங்கே தெரிகிறது?” – மிஷ்கின் விவகாரத்தில் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இடையிலான நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், தன்னை விமர்சித்த நபருக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தின் சென்னையில் நடைபெற்ற விளம்பர நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கீர்த்தி சுரேஷைப் பாராட்டிப் பேசிய மிஷ்கின், அவருடன் உரையாடியபோது தொடுகை ஏற்படுத்திய காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைப் பார்த்த சிலர், கீர்த்தி சுரேஷ் அசௌகரியமாக இருப்பதாகக் கருத்து வெளியிட்டனர்.

மேலும், திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் நடிகைகள், பொது நிகழ்வுகளில் இவ்வாறான தொடுகைகளுக்கு ஏன் அசௌகரியப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “முதலில், என் முகத்தில் அசௌகரியம் எங்கே தெரிகிறது? நாங்கள் இருவரும் தந்தை – மகள் போன்ற உறவு கொண்டவர்கள் என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நான் அசௌகரியமாக இருந்ததாக வைத்துக்கொண்டாலும், திரைப்படங்களில் தொடுகைகள் இடம்பெறுவதால் பொது இடங்களிலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்களா? நீங்கள் சில விடயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இந்தப் பதிலைத் தொடர்ந்து குறித்த விமர்சனப் பதிவை வெளியிட்ட நபர் அதனை நீக்கி, நடிகையிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

LATEST News

Trending News