விஜயகுமார் வீட்டில் குஷி.. குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்.. பேத்தியின் 5ம் மாத வளைகாப்பு
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவரின் பேத்தி தியா கர்ப்பமாக இருப்பதை அண்மையில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு ஏழாம் மாத வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் அழகிய புகைப்படங்களை தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகர் விஜயகுமார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்தவர். குடும்ப பாசத்திற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக சொல்லப்படும் இந்த குடும்பத்தில் தற்போது இன்னொரு சந்தோஷ தருணம் கொண்டாடப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகர்: விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் ஆகியோர் பிறந்த நிலையில், பின்னர் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். சினிமா குடும்பமாக இருந்தாலும், குடும்ப பந்தங்களை மிகுந்த அன்புடன் பேணிக் காக்கும் குடும்பமாக விஜயகுமார் குடும்பம் அறியப்படுகிறது.
தியா விஜயகுமார்: இந்த நிலையில் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதாவின் மகளான தியா, குடும்பத்தில் மிகவும் செல்லப் பேத்தியாக கருதப்படுபவர். தன் பெற்றோரின் வழியைப் பின்பற்றி மருத்துவம் படித்து மருத்துவராக உள்ள தியா, லண்டனில் செட்டிலாகி உள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு தியாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் கோலாகலமாக நடந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து லண்டனிலும் திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது.

5மாத வாளைகாப்பு: திருமணத்துக்குப் பிறகு தியா தனது கர்ப்ப செய்தியை ஸ்கேன் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்தனர். இந்த மகிழ்ச்சி தருணத்தைத் தொடர்ந்து தற்போது தியா சென்னை திரும்பியுள்ள நிலையில், குடும்ப உறவினர்கள் முன்னிலையில் அவருக்கு பாரம்பரிய முறையில் வளைகாப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய பட்டுப்புடவையில் அழகாக திகழ்ந்த தியா, மலர் அலங்காரம், சீர் வரிசை, பாரம்பரிய சடங்குகள் என முழு விமரிசையாக நடந்த இந்த விழா குடும்ப கொண்டாட்டமாக மாறியுள்ளது.

காத்திருக்கும் குடும்பம்: விழாவில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு தம்பதியருக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக கூறப்படுகிறது. வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும், "அழகான தருணம்", "விஜயகுமார் வீட்டில் சந்தோஷம்", "குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்" என ரசிகர்கள் கமெண்ட்களில் வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர். பெரிய திரை குடும்பத்தில் அடுத்த தலைமுறை வருகையை எதிர்நோக்கும் இந்த மகிழ்ச்சி தருணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தியாவின் வளைகாப்பு புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.