மதராஸி படம் ஃபயரா இருக்கும்.. எஸ்.கே என் நெருக்கமான நண்பர்.. அனிருத் பேச்சு!
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வந்த அனிருத் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், மதராஸி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றார்.
அமரன் திரைப்படத்திற்கு பின் நல்ல ஆக்ஷன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஏற்றபடி முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக மதராஸி உருவாகியுள்ளது. இதில், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார்கள். மேலும் விஜய்சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்த கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பிஜூ மேனன் , விக்ராந்த் மேலும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மதராஸி வெளியாகும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற வருகிறது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் மொழியில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலரை சற்று முன் படக்குழு வெளியிட்டது. அந்த டிரைலரில் துப்பாக்கி, வெடிகுண்டு, வன்முறை என அதிரடி காட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட, அமரன் திரைப்படம் போல இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் அனிருத், மதராஸி திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம், சிவகார்த்திகேயனுடனான காம்போவில் இது எனக்கு எட்டாவது திரைப்படம. முருகதாஸ் அவர்களுடன் இது எனக்கு மூன்றாவது திரைப்படம். முதன்முதலாக என்னை நம்பி ஒரு பெரிய படத்தை என்னுடைய 21 வயதிலேயே முருகதாஸ் அவர்கள் கொடுத்தார். அந்த நன்றி கடன் எப்போதும் என்னிடம் இருக்கிறது. இது மிகவும் ஸ்பெஷலான படம் செப்டம்பர் 5ந் தேதி படம் வெளியாக இருக்கிறது. அனைவரும் பார்த்து படம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
நான் 3 திரைப்படத்திற்கு இசையமைத்த போது, அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். எங்கள் இருவருடைய பயணமும், வளர்ச்சியும் ஒன்றாக தான் ஆரம்பித்தது. சிவகார்த்திகேயனிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவருடைய பர்சனாலிட்டி, அது மட்டுமல்லாமல் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரும் கூட, அவர் முருகதாசுடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த படத்திற்கு இப்படி, அந்த படத்திற்கு இப்படி என்றெல்லாம், இசை அமைக்க முடியாது, எல்லா படமும் எனக்கு ஒன்று தான், மதராஸி படம் சும்மா ஃபயரா இருக்கும் என்று அனிருத் பேசி இருந்தார்.
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ல் திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது. இதனால், இந்த இரண்டு படத்திற்கும் நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது