தப்பாக பேசிய சிங்கமுத்து.. ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்ட வடிவேலு

தப்பாக பேசிய சிங்கமுத்து.. ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்ட வடிவேலு

யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து தரப்புக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைகைபுயல் வடிவேலுவிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள், தன்னுடைய முகபாவனை, உடல் தோற்றம் என அனைத்தையும் மாற்றி நொடிபொழுதில் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடுவார். நகைச்சுவை மன்னன் என பெயர் எடுத்த வடிவேலுவுடன் இணைந்து பல படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிங்கமுத்து. திரையில் இவர்களின் காம்பினேஷனை பார்த்தாலே குபீர் என்று சிரிப்பு வந்துவிடும்.

இருவரும் பல திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில், சில கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து, பல யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவேலு குறித்து படு மோசமாக பேசி இருந்தார். இதை பார்த்து பொறுக்க முடியாத வடிவேலு, தன்னுடைய மானத்தையும் மரியாதையையும் கெடுத்த சிங்கமுத்து மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனு தாக்கல் செய்யவும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES