வாழை படத்துக்கு வந்த சிக்கல்.. உண்மையை மறைத்தாரா மாரி செல்வராஜ்?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் வாழை. நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோரும், மாரி செல்வராஜின் ஊரை சேர்ந்த சிறுவர்களும் நடித்த வாழை பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வரும் படத்தை பலரும் கொண்டாடிவருகிறார்கள். இந்தச் சூழலில் வாழை படத்தில் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாக சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வாழை படம் வெளியானது. தனது சிறு வயதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த வலியான நிகழ்வுகளை திரைக்கதையாக்கி ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். படிக்கும் சிறுவர்கள் படித்துக்கொண்டே வேலைக்கு செல்வதையும், வாழை தார் சுமப்பதில் உள்ள வலியையும், ஒரு ரூபாய் கூலி உயர்த்தி கேட்டதற்கு அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர் செய்யும் அலட்சியமும் என யாரும் பேசாத வாழ்வியலை துணிந்து பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
படத்தில் சோகமான முடிவுதான் என்று முன்னரே தெரிந்திருந்தாலும்; படத்தில் பெரும்பாலான காட்சிகள் கலகலப்பாக போய்க்கொண்டிருந்ததை வெகுவாகவே ரசித்தார்கள் ரசிகர்கள். அதனையடுத்து படத்தின் கடைசி 30 நிமிடங்களில் ரசிகர்களை சீட்டிலேயே உறைய வைத்துவிட்டார் மாரி செல்வராஜ். படம் முடிந்து வெளியே வந்தவர்கள் ஒரு துக்க மனநிலையுடனே வந்தார்கள். மேலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் சிறுவன் உணவு உண்ண முடியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததும் ஒருபக்கம் வலியையே கொடுத்தது.
படத்தின் இரண்டு தூண்கள் என்றால் சிவனணைந்தான் பெருமாள் (பொன்வேல்), சேகர் (ராகுல்). இவர்கள் இருவருக்கும் இதுவே முதல் படம். ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் தங்களது நடிப்பில் கலக்கிவிட்டார்கள். அதேபோல் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாலும், மாரியின் மேக்கிங்காலும் படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.
இந்தப் படத்தில் வந்த விபத்து காட்சி உண்மையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாழைத் தார்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி விபத்துக்குள்ளானதில், தார்களின் மேலே உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். அதில் மாரி செல்வராஜின் அக்கா, சித்தப்பா மகன் என உறவினர்களும் இருந்தார்கள். இந்தப் படத்தை எடுக்கும்போதுதான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்; மருத்துவமனையில் கூட சேர்ந்தேன் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாழை படத்தில் சில உண்மைகளை மறைத்துவிட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் பேட்மாநகரம் ஊர் மக்கள் ஆதங்கப்பட்டிருக்கின்றனர். அதாவது வாழைத் தார் ஏற்றிக்கொண்டு வந்த லாரி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தை படத்தில் வைத்திருக்கிறார் மாரி. ஆனால் விபத்தில் சிக்கிய சிலரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதனையும் படத்தில் வைத்திருக்கலாம் என்றுதான் எங்களுக்கு தோன்றுகிறது. ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை எடுக்கும்போது அங்கு நடந்தவற்றை வைக்க வேண்டும் என்றனர்.