அர்ஜுன் தாஸ் ஜோடியாகும் நடிகர் ராஜசேகரின் மகள்..!
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.
பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்விழாவில், படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது, ''பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. இயக்குநர் விஷால் வெங்கட் ஒரு சிறந்த இயக்குநர் அதற்கு அவரது முதல் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நானும் எங்கள் குழுவும் ஒரு 10 முறை படத்தின் கதையில் சந்தேகங்கள் கேட்டிருப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் பொறுமையாகக் கதையை விளக்கமாகக் கூறுவார். இந்தப் படம் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும். நாங்கள் தேர்வு செய்துள்ள நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். குறிப்பாக காளி வெங்கட் சாருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா அவர்களுக்கு வாழ்த்துகள். நான் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவரது பாடல்கள் நம்மை மெய் மறக்கச் செய்து விடும். இந்தப் படத்தின் பாடல்களும் அதே போல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படத்தில் பணிபுரியவுள்ள அத்தனை கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி.''
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, ''இந்தப் படத்தின் கதையை நான் முழுவதுமாக கேட்டுள்ளேன். ஆனாலும் என்னை நம்பாமல் மீண்டும் படத்தின் கதையை இயக்குநர் எனக்கு அனுப்பியுள்ளார். இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். அர்ஜுன் தாஸுடன் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளேன். ஆனால் எங்கள் இருவருக்கும் சேர்ந்தது போல காட்சிகள் இல்லை. ஆனால், இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தே பயணம் செய்யவுள்ளது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தைரியமும், நம்பிக்கையும் தான் எங்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.''
நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் பேசியதாவது, ''இயக்குநர் ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார். நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான். அவரது பாடலுக்காகக் காத்திருக்கிறேன். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.''
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது, ''GEMBRIO நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கொரானா காலத்தில் கேட்டேன். அர்ஜுனின் அநீதி படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார். படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன். படத்தின் பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் வண்ணம் இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள்.''
இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது, ''என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி. எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் நான் தேர்வு செய்துள்ள நடிகர்களுக்கு இந்தப்படம் நல்ல கதாபாத்திரமாக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார். அவருடன் பல விஷயங்கள் பேசியுள்ளேன். அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கும் நன்றி. அவர்களுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். கூடுதலாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும். எங்கள் இளம் குழுவிற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும். அனைவருக்கும் நன்றி.''
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, ''இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். விஷால் மதுரை வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.''
நடிகர் நாசர் பேசியதாவது, ''தயாரிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துகள். கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதற்குக் காரணம் நீங்கள் தேர்வு செய்த இயக்குநர். இயக்குநர் விஷால் வெங்கட் என்னை ஆச்சரியப்பட வைத்தவர். அவரின் முதல் படத்தில் முதல் நாளிலிருந்தே, அவர் என்னை ஈர்த்து விட்டார். தனது பணியில் மிகவும் தெளிவானவர். நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு இந்தப் படம் மூலம் புது அடையாளம் கிடைக்கும். இந்தப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும். இயக்குநர் விஷாலுக்கு நான் எப்போதும் ஆதரவாய் இருப்பேன். வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.''