தென்னிந்திய நடிகை என்பதால் இதெல்லாம் நடந்தது? மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தனக்கு பாலிவுட் வட்டாரத்தில் நடந்த புறக்கணிப்பு குறித்து மனம் திறந்துள்ளார். அவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருக்கிறது.
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் ‘தேசமுருடு’ எனும் திரைப்படம் மூலம் 2007 இல் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘வேலாயுதம்’, நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என்று 50 க்கும் மேற்பட்ட தென்னிந்திய சினிமாக்களில் நடித்த இவர் தனது நண்பரான சோஹேல் கதுரி என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா தான் தென்னிந்திய படங்களில் பணிபுரிந்து வந்ததால் வடிவமைப்பாளர்கள் தனக்கு ஆடை வழங்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
குல்டே.காம் எனும் தளத்திற்கு அளித்த பேட்டியொன்றில் தென்னிந்திய படங்களில் நடித்து வந்ததால் டிசைனர்கள் ஆடைகளை வழங்க முன்வரவில்லை. அனால் தற்போது என்னுடைய படங்கள் வெளியான பிறகு டிரெய்லர் வெளியீட்டு விழா இருக்கிறது. நீங்கள் ஏன் எங்களுடைய ஆடைகளை அணியக்கூடாது என்று கேட்கின்றனர். நானும் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? என்று தனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளார்.
மேலும் நான் இந்திய சினிமாவில் வேலை செய்கிறேன். நான் ஒரு இந்திய நடிகை. இதை நான் எப்போதும் கூறுவேன் என்று பதிலளித்துள்ளார். நடிகை ஹன்சிகாவிற்கு நடந்த புறக்கணிப்பு குறித்த இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.