'என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என தெரியவில்லை: விஜய்காந்த் குறித்து பிரேமலதா உருக்கம்!

'என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என தெரியவில்லை: விஜய்காந்த் குறித்து பிரேமலதா உருக்கம்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை என பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரேமலதா கூறியதாவது:

ஒரு வயது இருக்கும்போதே விஜயகாந்தின் அம்மா இறந்துவிட்டார், அம்மா பாசம் என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது. என்னை திருமணம் செய்து கொண்டவுடன் அவர் சொன்ன முதல் வார்த்தை, எனக்கு அம்மா இல்லை, நீதான் எனக்கு அம்மாவாக இருந்து என்னை பார்த்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இந்த நிமிடம் வரை அவருக்கு மனைவியாக மட்டுமின்றி ஒரு தாயாகவும் அவரை நான் பார்த்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டது. காயங்கள் ஏற்பட்டாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்ததாக வரலாறு இல்லை.

அவரது உடல்நிலை குறித்த கேள்வியை கேட்கும் போதெல்லாம் என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. திரையுலகினர்களுக்கும் பொதுமக்களுக்கும் கணக்கில்லாத நன்மைகள் செய்த ஒருத்தருக்கு கடவுள் இப்படி ஒரு சோதனையை ஏன் கொடுத்தார் என்று தெரியவில்லை. திரையுலகில் உள்ளவர்களுக்கு சாப்பாடு போட வேண்டும், உதவி செய்ய வேண்டுமென்று எடுத்துகொண்டால் அதற்கு முதல் எடுத்துக்காட்டு கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது நம் அனைவருக்குமே மிகுந்த சோகம் தான்.

அவர் 75வது சுதந்திர தினத்தில் தொண்டர்களை சந்திக்க விரும்பினார். அவரது விருப்பத்தின் காரணமாக தான் நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ஆனால் அவரை அழைத்து வந்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அழைத்து வராமல் இருந்தாலும் ஏன் கேப்டனை கண்ணில் காட்டவே இல்லை என்றும் கேட்கிறார்கள். நாங்கள் என்னதான் செய்வது? தேசியக் கொடியை ஏற்றிவிட்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்த போது எங்கள் கண்ணிலும் கண்ணீர் வந்தது’ என்று விஜயகாந்த் குறித்து பிரேமலதா உருக்கமாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES