நிஜ வாழ்க்கையில் பிரேத பரிசோதனை அனுபவத்தை சந்தித்த அமலாபால்!
நடிகை அமலாபால் நடித்து தயாரித்த ’கடாவர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் பத்ரா என்ற கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் ஒரு எலும்பை வைத்து அந்த எலும்பு ஆணா பெண்ணா? அந்த எலும்புக்கு உரியவர் யார்? என்பது உள்பட அந்த எலும்புக்குரிய ஜாதகமே சொல்லும் அளவுக்கு திறன் படைத்த ஒரு பிரேதப் பரிசோதனை வல்லுனர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் படத்தின் இறுதியில் ‘கடாவர்’ என்ற என்ன? என்பதற்கு அவர் மிக எளிமையாக விளக்கம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அமலாபால் ரசிகர்களிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தின் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் கேரக்டரில் நடிக்க முடிவு செய்த பின்னர் இந்த படத்திற்காக பல ஆய்வுகள் செய்ததாகவும் பல மருத்துவமனைகளுக்கு இயக்குனருடன் நேரில் சென்று நிஜமாகவே பிரேத பரிசோதனையை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் இந்த படத்தின் மூலம் தான் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் உண்மையாகவே பிரேத பரிசோதனையை நேரில் பார்க்கும்போது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.