ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிபிராஜின் அடுத்த படம்: 24 மணி நேரத்தில் சந்திக்கும் த்ரில் கதை!
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் நடிக்கும் அடுத்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள “வட்டம்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. .*
சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்றுகிறது.
இந்த படம் குறித்து நடிகர் சிபிராஜ் கூறியதாவது: வட்டம் எனது கேரியரில் மிக முக்கியமான படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இது எனது முதல் படம். சினிமா மீதான ஆர்வம் மற்றும் தனித்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்து அதை சிறந்த தரத்தில் வழங்கும் திரு.எஸ்.ஆர். பிரபு மற்றும் திரு எஸ்.ஆர். பிரகாஷ் ஆகியோரின் ரசிகன் நான். ’வட்டம்’ படத்தை சூது கவ்வும் புகழ் திரு. ஸ்ரீனிவாஸ் கவிநயம் எழுதி, மதுபான கடை புகழ் திரு.கமலக்கண்ணன் இயக்கியிருப்பது, எனக்கு மிக மகிழ்ச்சியை தந்தது. இந்த இரண்டு படங்களின் புத்துணர்ச்சியையும் நகைச்சுவையையும் ரசித்ததால் என்னை இந்த படைப்பு மேலும் உற்சாகப்படுத்தியது. எளிய இளைஞனாக நடிப்பதிலிருந்து மாறி, சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை வட்டம் பூர்த்தி செய்துள்ளது. பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழக்கையை அதன் போக்கில் அந்த தருணத்தை அனுபவித்து வாழும் மனிதனாக நடித்துள்ளேன், நான் இப்படத்தில் கதாநாயகன் என்றாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கு, குறிப்பாக ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் அதுல்யா ரவி நடித்த கதாபாத்திரங்களுக்கும் படத்தில் சம அளவில் முக்கியத்துவம் உள்ளது. இப்படம் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் தரும்.
இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது: நம் வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை ஒளி வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம், அதே நபர்களைச் சந்திக்கிறோம், ஒரே மாதிரி யோசிக்கிறோம். அதே பணிகளைச் செய்கிறோம், இதை மீண்டும் மீண்டும் நாள் முழுக்க செய்து கொண்டு இருக்கிறோம். இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும், ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும். நமது முழு பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும், மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். இது தான் வட்டம் திரைப்படத்தின் மையக் கருவாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக் தான் திரைக்கதை.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனித்துவமான படங்கள், வணிகரீதியான பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை சீரான முறையில் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரவலான வரிசையுடன், அது அவர்களின் இதயங்களைத் தொடர்ந்து வெல்லும், பல படைப்புகளை தற்போது வரிசைப்படுத்தி வைத்துள்ளது.