பிக்பாஸ் பெயரில் மர்ம நபர்கள் மோசடி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக மர்ம நபர்கள் அழைப்பு விடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்தவகையில் அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், 95 நாட்களுக்கு பிறகு கொரோனா 2-வது அலை காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் வெற்றி பெறுபவரை தேர்வு செய்ய விரைவில் பொது ஓட்டெடுப்பு நடத்த இருக்கிறார்கள்.
இந்நிலையில், மலையாளத்தில் அடுத்து தொடங்க உள்ள பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக மர்ம நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது மோசடியானது என்றும், உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் எனவும் பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர்.