சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த மகேந்திரன்... குவியும் வாழ்த்துக்கள்
சினிமாவில் தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்து, 29 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தார் மகேந்திரன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜனுடன் ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசு விருதை பெற்றார்.
இதைத் தொடர்ந்து ‘பரம்பரை’, ‘கும்பகோணம் கோபாலு’, விஜய் நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’, ரஜினியுடன் ‘படையப்பா’, அஜித்துடன் ‘முகவரி’, பிரபுதேவாவுடன் ‘நெஞ்சிருக்கும் வரை’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மாஸ்டர் மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த மகேந்திரன் ‘விழா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தனுஷின் ‘டி43’ படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், சினிமாவில், தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்து, 29 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மகேந்திரன் தனது பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த மகேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.