கிங்ஸ்டன் திரைவிமர்சனம்
ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது கிங்ஸ்டன். அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ நிறுவனம் தயாரித்துள்ளது. திகில் கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க போனால் பிணமாக மட்டுமே திரும்பி வருகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்க, கிராமத்தில் உள்ளவர்கள் அச்சம் அடைகிறார்கள்.
1982ல் இந்த சம்பவம் அரங்கேற, இனி யாரும் கடலுக்கு மீன்பிடிக்க போக கூடாது என அரசாங்கம் உத்தரவிடுகிறது. இதற்கெல்லாம் காரணம் கடலில் அடக்கம் செய்யப்பட்டவனின் ஆன்மா தான் என கிராம மக்களிடையே அச்சம் ஏற்படுகிறது. பல ஆண்டுகள் இப்படியே போக, கதாநாயகனாக என்ட்ரி கொடுக்கிறார் ஜி.வி. பிரகாஷ் (கிங்ஸ்டன்).
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவராக இருக்கும் கிங்ஸ்டன், எப்படியாது பணத்தை சேர்த்து, தனக்கென்று ஒரு போட் வாங்கி, அதில் கடலுக்கு செல்ல வேண்டுமென நினைத்து, அதற்காக தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தனது முதலாளில் போதை பொருள் கடத்துவதை தெரிந்துகொள்ளும் கிங்ஸ்டன் அவரிடம் இருந்து விலகுகிறார்.
இதன்பின் துணிந்து கடலுக்கு செல்கிறார் கிங்ஸ்டன். கடலுக்கு போனால் உயிருடன் மீண்டும் திரும்ப முடியாது என தெரிந்தும், தனது நண்பர்களுடன் சேர்ந்து, துணிந்து செல்கிறார். இவர்கள் சொல்லும் கதை உண்மையில்லை என நிரூபிக்க கடலுக்கு செல்லும் கிங்ஸ்டன் மீண்டும் கிராமத்துக்கு வந்தாரா..? கடலுக்குள் அப்படி என்ன இருக்கிறது..? என்பதே படத்தின் மீதி கதை.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் எடுத்துக்கொண்ட கதைக்களம் அருமையாக இருந்தாலும், அதை திரைக்கதையில் வடிவமைத்த விதம் அருமையாக இல்லை. ஆபரேஷன் சக்சஸ் ஆனால் நோயாளி இறந்து விட்டார் என சொல்வது போல் தான் இப்படம் இருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் முதல் அனைத்து நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக கடலில் வரும் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால், திரைக்கதை ஏமாற்றத்தை கொடுக்கிறது.
முதல் பாதி தான் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது என்று பார்த்தால், இரண்டாம் பாதியும் அப்படியே தான் செல்கிறது. ஃபேண்டஸி கதைகளில் லாஜிக் மீறல்கள் இருக்கும். அது நம்மை ரசிக்க வைக்கும். ஆனால், இப்படத்தில் வரும் காட்சிகளோ நம் பெருமையை தான் சோதிக்கிறது. முக்கியமாக கடலில் வந்த ஆவிகளை கட்டையை வைத்து அடித்து மாஸ் காட்டியது எல்லாம் ரொம்ப ஓவர்.
அதே போல் குழப்பமான எடிட்டிங் சலிப்பை ஏற்படுத்துகிறது. சொல்ல வந்த விஷயத்தை அழகாக எடிட்டிங்கில் எடுத்து கூறியிருந்தால் கூட படத்தை ரசித்திருக்க முடியும். இதுவே படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். கடலில் வந்த creature, அதற்கான பில்டப் காட்சிகள் சிறப்பாக இருந்தது. ஆனால், இறுதியில் அதையும் டம்மி பீஸ் ஆக்கிவிட்டார்கள்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே. பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் படத்திற்கு பலம். குறிப்பாக கடலில் நடக்கும் காட்சிகளை காட்டிய விதம் சிறப்பு. அதற்கு தனி பாராட்டுக்கள்.மேலும் வில்லனாக வரும் அந்த creature-ஐ உருவாக்கிய விதமும் சிறப்பாக வடிவமைத்திருந்தனர்.
பிளஸ் பாயிண்ட்
ஜி.வி. பிரகாஷ் நடிப்பு
கதைக்களம்
ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை
எடிட்டிங்
மொத்தத்தில் கிங்ஸ்டன் நன்றாக வந்திருக்க வேண்டிய திரைப்படம்..