வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்… உடன் இருப்பவர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும்….. சிவகார்த்திகேயன் பேச்சு!
நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி தனது கடின உழைப்பினாலும் திறமையினாலும் வெள்ளித்திரையில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறி தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தது SK 23, பராசக்தி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகின்றன. இந்நிலையில் தான் நேற்று (ஜனவரி 31) திருச்சியில் தான் படித்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இப்பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். இன்றைக்கு நான் ஒரு நடிகர், சிறப்பு விருந்தினராக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி நான் இப்பள்ளியில் படித்து வளர்ந்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் பள்ளியை எப்போதும் மறக்க மாட்டேன்” என்று பேசினார். மேலும் பள்ளி வாழ்க்கையை மிஸ் பண்ண கூடாது எனவும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் உடன் இருப்பவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார் சிவகார்த்திகேயன்.