பாலியல் சீண்டலில் ஈடுபட்டால்.. 5 ஆண்டுகள் சினிமாவில் தடை.. தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்!

பாலியல் சீண்டலில் ஈடுபட்டால்.. 5 ஆண்டுகள் சினிமாவில் தடை.. தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்!

தமிழக திரையுலகில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால், அவர்கள் 5 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும், பாதிக்கப்படுபவர்கள், புகார் கொடுக்க வசதியாக தனி தொலைப்பேசி எண் மற்றும், இமெயிலும் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அவரை கடத்தி, காரில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, நடிகைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையாள சினிமாத் துறையின் பெண்கள் அமைப்பினர் முன்வந்ததைத் தொடர்ந்து ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.

2019 ஆண்டு ஹேமா கமிஷன், தனது அறிக்கையை கேரள மாநில அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும், அந்த அறிக்கை சுமார் நான்கரை ஆண்டுகளாக வெளியாகவில்லை. அதன் பின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியானது. அதில். நடிகைகள் பாலியல் இச்சைகளுக்காக நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் என யார் வேண்டுமானாலும் இதுபோன்று நிர்ப்பந்திக்கும் நிலை இருக்கிறது. வாய்ப்புக்காகப் படுக்கையை பகிர்ந்து கொள்வதுதான் மற்ற துறைகளில் இருந்து சினிமாத்துறையை வேறுபடுத்திக்காட்டுறது என அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அறிக்கை வெளியானதைத்தொடர்ந்து பல நடிகைகள், இயக்குநர், நடிகர் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால், மலையாள சினிமாவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதைத்தொடர்ந்து, தமிழ் நடிகைகள் சிலர் தமிழ் சினிமாவில் இதுபோன்ற அசிங்கம் நடப்பதாகவும், சில உப்புமா கம்பேனிகள் இதை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் கூட்டம் கூட்டப்பட்டு, ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் தமிழக திரையுலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து விவாதித்தது.

அதன்படி, பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்டவர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தால், புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு, புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு திரைத்துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து கொடுக்கும். ஏற்கனவே, பாதிக்கப்படுபவர்கள், புகார்களை வசதியாக தனி தொலைப்பேசி எண் மற்றும், இமெயிலும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் புகார் அளிக்கலாம் என்றும், மீடியாக்களில் பேசுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LATEST News

Trending News