திருமணமாவதற்கு முன்னரே இப்படியா?.. நாக சைதன்யா - சோபிதா எடுத்திருக்கும் முடிவு இதுவா?
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க அடுத்ததாக அவர் சோபிதா துலிபாலாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனா குடும்பம். நாகார்ஜுனா நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் படம் வெளியாகவிருக்கிறது.
இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தெலுங்கு தேசத்தில் பெரிய வீட்டு மருமகளாக மாறினார்.
திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட்டாக இருந்தார். அதேசமயம் சமந்தா சினிமாவில் நடிப்பதை நாகார்ஜுனாவும், அமலாவும் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. இருந்தாலும் சமந்தா முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார்.
நிலைமை இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் - சமந்தாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்ததுதான் என்று இன்றளவும் பேச்சு இருக்கிறது. ஆனால் சைதன்யாவோ, சமந்தாவோ அதற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவின் கரியர் பீக்கில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதிலிருந்து இப்போது மீண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார்.
இருவரும் பிரிந்த பிறகு அவரவர் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்தார். அவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சிம்பிளாக நடந்து முடிந்தது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. விரைவில் அவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாக சைதன்யா - சோபிதா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் நாக சைதன்யாவும், சோபிதாவும் கலந்துகொள்ளவிருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்வதற்கு வாய்ப்பு இல்லை; தொடக்க நிகழ்ச்சியில் வேண்டுமானால் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவே வாய்ப்பு இருப்பதாகவும் ஒருதரப்பினர் கூறுகிறார்கள்.