நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்கே தான் இருக்கிறேன்... மோகன்லால் பேட்டி
திருவனந்தபுரம்: சினிமாவில் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பது குறித்த புகார்கள் குறித்து விசாரிக்க, ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இது குறித்து இத்தனை நாள் வாய் திறக்காமல் இருந்த மோகன் லால், நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்கே தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹேமா கமிஷன் கமிட்டி 233 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிடப்பட்டது. அதில், மலையாளத் திரையுலகில் காஸ்டிங் கவுச் ஒரு பெரிய பிரச்சினையாகவே மாறி உள்ளது. இது பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழவகுக்கிறது என்றும், வேலை வேண்டும் என்றால், அதற்கு ஈடாக பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இது ஆபத்தான ஒரு விஷயமாக மாறி வருவதாகவும் பெண்கள் தெரிவித்திருந்தனர்.
சினிமா கனவோடு வரும் பெண் நடிகர்களை கட்டாயப்படுத்துவது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என்றும், அவர்களை சமரசம் செய்து கொண்டு சிலர் படவாய்ப்பை பெற்று விடுகின்றனர். சிலர், இதற்கு உடன்படாத போது அவர்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர். மலையாள திரையுலகில் இதுபோன்ற பாலியல் சீண்டல் அதிக அளவில் காணப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
அந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பல நடிகைகள் பல நடிகர்கள் மீது பாலியல் ரீதியாக புகார் அளித்ததை அடுத்து ஒட்டு மொத்த திரைத்துறையின் பார்வையும் கேரள சினிமா மீது இருந்தது. நாளுக்கு நாள் பிரச்சனை பெரிதானதைத் தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உட்பட ஒட்டு மொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வந்த நடிகர் மோகன் லால், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ஹேமா கமிட்டி அறிக்கையில் முழுமையாக என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது, அனைவரும் இணைந்து தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சனையில் இருந்து மலையாள சினிமாவை காக்க வேண்டும். பாலியல் புகாரில் கடைநிலை ஊழியர்கள் கூட பாதிக்கப்படக்கூடாது.
மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? நான் எங்கும் ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன். பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிபதி ஹேமா குழு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். பேரிடர் காலத்தில் அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. அதன் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்று மோகன் லால் பேசி உள்ளார்.