தெலுங்கிலும் பாலியல் தொல்லை.. தி வாய்ஸ் ஆஃப் உமன் அறிக்கையை வெளியிட வேண்டும்.. சமந்தா கோரிக்கை
நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்த கொண்ட இருக்கும் நிலையில், நடிகை சமந்தா, தெலுங்கு சினிமாவிலும் பாலியல் தொல்லை தொடர்பான அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிரான நடிக்கும் பாலியல் தொல்லை குறித்து, ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பல பெண்களிடம் விசாரணை நடத்தி சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கையை வெளியிட்டது. இதில், மலையாள சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான சங்கடத்தை நடிகைகள் சந்திப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில், ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து சித்திக் ராஜினாமா செய்தார். அதே போல பழம் பெரும் நடிகர் திலகனின் மகளும் பெரிய நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.
இப்படி தொடர்ந்து பல நடிகைகள் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி வருவதால், மலையாள சினிமாவில் அது பெரும் புயலை கிளப்பியது. இதைத்தொடர்ந்து, மலையாள திரைப்பட நடிகர் சங்கம் ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த அறிக்கையை அரசும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதில், கேரளாவில் wcc என்ற அமைப்பின் செயல்பாடுகளை தாம் வரவேற்பதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில், துணை அமைப்பாக தி வாய்ஸ் ஆஃப் உமன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
கேரளாவைப் போலவே தெலங்கானா அரசும், பாலியல் சீண்டல்கள் குறித்த தி வாய்ஸ் ஆஃப் உமன் அமைப்பின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடப்பட்டால் தெலுங்கு திரையுலகில் பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்க முடியும் என்றும், அரசு மற்றும் திரைத்துறை சார்பில் திட்டங்களை வகுக்க உதவும் என்றும் சமந்தா கோரிக்கை வைத்துள்ளார்.