மறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு கோல்டன் குளோப் விருது
ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துரையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதுகளாக கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. 78-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்தது. இணையதளம் மூலமாகவே நேரலையில் வெற்றி பெற்றவர்கள் பெயர்களை அறிவித்து கவுரவித்தனர்.
மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு டிராமா திரைப்பட பிரிவில் ‘மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். இதே பிரிவில் சிறந்த நடிகை விருது ‘தி யுனைடட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லீ ஹாலிடே’ படத்தில் நடித்த ஆண்ட்ரா டேவுக்கு கிடைத்தது.
இதுபோல் சிறந்த டிராமா திரைப்படத்துக்கான விருது ‘நோ மேட்லேண்ட்’ திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குனர் விருதை ‘நோமேட்லேண்ட்’ படத்துக்காக க்ளோ ஜாவோ பெற்றார். சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ‘மினாரி’ படத்துக்கு கிடைத்துள்ளது.