ஃபைட் கிளப் திரை விமர்சனம்
உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து உறியடி 2ஆம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை.
இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து விஜய் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஃபைட் கிளப். ஆதித்யா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தனது G Squad நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கிய ஃபைட் கிளப் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
சிறு வயதிலேயே கால்பந்து விளையாட்டில் பட்டையை கிளப்பும் கதாநாயகன் செல்வாவை [விஜய் குமார்] பெரிய கால்பந்து வீரனாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார் பெஞ்சமின்.
பெஞ்சமினுடைய தம்பி தான் ஜோசப். இவர் கிருபாகரன் என்பவருடன் இணைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்கிறார். இது பெஞ்சமினுக்கு தெரியவர முதலில் தனது தம்பியை எச்சரிக்கிறார். ஆனாலும் அதை கேட்காமல் கஞ்சா வியாபாரம் செய்கிறார் ஜோசப். ஒரு நாள் தனது தம்பியையும், கிருபாகரனையும் அடித்துவிடுகிறார் பெஞ்சமின்.
இதனால் தனது அண்ணன் என்றும் பார்க்காமல் கிருபாகரனுடன் இணைந்து பெஞ்சமினை கொலை செய்கிறார் ஜோசப். ஆனால், இந்த கொலையில் ஜோசப் போலீசிடம் சிக்கிக்கொள்ள கிருபாகரன் தப்பித்துவிடுகிறார். கொலை வழக்கில் சிறைக்கு செல்லும் சோசப் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்.
தன்னை ஒரே வாரத்தில் சிறையில் இருந்து ஜாமினில் எடுக்கிறேன் என கூறி 12 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருக்க வைத்த கிருபாகரனை பழிதீர்க்க வேண்டும் என முடிவு செய்கிறார் ஜோசப். இதற்கு பகடைக்காயாக கதாநாயகன் செல்வாவை பயன்படுத்திக்கொள்கிறார். இதனால் செல்வா சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.
ஃபைட் கிளப் என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படமுழுக்க சண்டைகள் தான் நிறைந்து இருக்கிறது. ஒரு பக்கம் அது படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட, அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது.
சசி என்பவர் எழுதிய கதையை வைத்து இயக்குனர் அப்பாஸ் எடுத்த முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். முழுக்க முழுக்க ஒரு ராவான ஆக்ஷன் படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆனால், படத்தில் சுவாரஸ்யம் இருந்ததா என்று கேட்டால், அது கேள்விக்குறி தான்.
சண்டை, போதை, பழி தீர்ப்பது இதுவே படம் முழுக்க இருப்பதால் படத்தின் மீது லேசாக சலிப்பு ஏற்படுகிறது. அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கூறியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சூப்பர்.
குறிப்பாக கதாநாயகன் விஜய்யின் செல்வா ரோல், அவினாஷின் சோசப் ரோல் மற்றும் கிருபாகரன் ரோல் மற்றும் இவர்களை சுற்றி இருக்கும் பசங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக அவினாஷ் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
மகாபாரதத்தில் வரும் சகுனியை போல் அவினாஷின் கதாபாத்திரத்தை பக்காவாக செதுக்கியுள்ளார் இயக்குனர் அப்பாஸ். ஆனால், எதற்காக இப்படத்தில் கதாநாயகி என்று தெரியவில்லை. அவருக்கு கொஞ்சம் கூட ஸ்கோப் கொடுக்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே அவர் வைத்திருந்தது போல் தெரிந்தது.
கமர்ஷியல் படங்களில் வருவது போல் இல்லாமல் நேரில் ஒரு சண்டை நடந்தால் எப்படி இருக்குமோ அதே போல் படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்த விக்கி மற்றும் அபூபக்கருக்கு பாராட்டுக்கள். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.
முக்கியமாக பல இடங்களில் பட்டையை கிளப்பியுள்ளது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. குறிப்பாக சண்டை காட்சிகளில் இவர் போட்டுள்ள பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. எடிட்டர் கிருபாகரன் உழைப்பு திரைக்கதையில் நன்றாக தெரிகிறது. திரைக்கதையை தனது எடிட்டிங் மூலம் அருமையாக காட்டியுள்ளார்.
இவை அனைத்தையும் தாண்டி வசனங்களுக்கு தனி பாராட்டு. 'நான் பிறக்குறதுக்கு முன்னாடி ஆரம்பிச்ச சண்டை, நான் இறந்தாலும் நிக்காது' என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது.
பிளஸ் பாயிண்ட்
விஜய் குமார், அவினாஷ் நடிப்பு
கோவிந்த் வசந்தா பின்னணி இசை
எடிட்டிங்
இயக்குனர் அப்பாஸின் ராவான ஆக்ஷன் மேக்கிங் அட்டெம்ப்ட்
மைனஸ் பாயிண்ட்
சண்டை காட்சிகள் ஒரு பக்கம் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட, அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது
படத்தில் கதாநாயகிக்கு கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லை
வெகுஜன மக்களை இப்படம் கவருமா என்பது கேள்விக்குறி தான்
மொத்தத்தில் வெறித்தனமான சண்டையோடு வெறுப்பேத்தியுள்ளது ஃபைட் கிளப்