விஜய்யை விமர்சித்த பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்.. போதைப்பொருள் சோதனை விவகாரத்தில் தற்போது வெளியிட்ட புதிய பதிவு!
விஜய்யை டேக் செய்து காவல்துறையைக் கடுமையாக விமர்சித்திருந்த பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ், தற்போது போதைப்பொருள் சோதனை விவகாரத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 8ஆம் திகதி இரவு காவல்துறையினர் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள், புகார் அளித்தது யார் எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழக முதல்வர் விஜய்யையும் டேக் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், ஆவடி காவல்துறையினர் வெளியிட்ட விளக்கத்தில், 15 பேர் சோதனையில் ஈடுபடவில்லை என்றும், ஒரு ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் மட்டுமே சட்ட நடைமுறைகளின்படி சோதனை நடத்தியதாகவும் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி, சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் உண்மையை வெளிப்படுத்தும் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளின் விளக்கத்துக்குப் பிறகு பாலாஜி முருகதாஸ் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகார் தொடர்பான தகவல்கள் மற்றும் சோதனை நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த போதைப்பொருள் சோதனை விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடிகர் வெளியிட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.